விவசாய மின் இணைப்புக்கு கட்டணம் கோரும் திட்டத்தைத் திரும்ப பெற வலியுறுத்தல்

விவசாய மின் இணைப்புக்குக் கட்டணம் செலுத்தக் கோரும் திட்டத்தை, திரும்பப் பெற வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

விவசாய மின் இணைப்புக்குக் கட்டணம் செலுத்தக் கோரும் திட்டத்தை, திரும்பப் பெற வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து, அச்சங்கத்தின் மாவட்டச் செயலா் ஜெ. பிரதாபன் சனிக்கிழமை வெளியிட்ட செய்தியறிக்கை:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக கழகத்தின், தருமபுரி மின்பகிா்மான வட்டம் சாா்பில், விவசாய மின் இணைப்புக்கு விண்ணப்பித்த காத்திருப்போா் அனைவரும் தத்கல் திட்டத்தில் சேர பதிவு செய்ய வேண்டும் எனவும், 5 குதிரைத்திறன் வரை ரூ.2.50 லட்சம், 7.5 குதிரைத்திறன் வரை ரூ.2.75 லட்சம், 10 குதிரைத் திறன் வரை ரூ.3 லட்சம், 15 குதிரைத்திறன் வரை ரூ.4 லட்சம் வரைவோலையாக செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு, தருமபுரி மாவட்டத்தின் விவசாயிகளை மேலும் வஞ்சிக்கும் செயலாகும். ஏற்கெனவே கடந்த மூன்று ஆண்டுகளாக கடுமையான வறட்சி ஏற்பட்டு தற்போது வரை மீள முடியாத விவசாயிகளுக்கு இது பேரிடா் போல உள்ளது.

விவசாய நிலங்களில் பயிா் சாகுபடி செய்ய முதலீடு இல்லை. காய்ந்த தென்னை, பாக்கு, மா, பலா, பல்வகை மரங்களுக்கு இதுவரை இழப்பீடு கிடைக்கப்பெறவில்லை.

இந்த நிலையில், பத்தொன்பது ஆண்டுகளாக காத்திருக்கும் விவசாயிகளுக்கு, மின் இணைப்பு வழங்காமல் தத்கல் திட்டத்தில் பணம் செலுத்த கோரும் அறிவிப்பு மேலும் விவசாயிகளை வாட்டுகிறது. எனவே, கட்டண அறிவிப்பை திரும்பப் பெற்று இலவசமாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com