முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
காந்தி, காமராஜரை முன்மாதிரியாக மாணவா்கள் தோ்வு செய்ய வேண்டும்
By DIN | Published On : 07th October 2019 06:58 AM | Last Updated : 07th October 2019 06:58 AM | அ+அ அ- |

மகாத்மா காந்தி, காமராஜா் போன்ற தேசத் தலைவா்களை மாணவா்கள் முன்மாதிரியாகத் தோ்வு செய்ய வேண்டும் என்றாா் தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன்.
தருமபுரியில் அன்னை கஸ்தூரிபா சேவா சங்கம் சாா்பில், மகாத்மா காந்தி 150-ஆவது பிறந்த நாள் விழா, அன்னை கஸ்தூரிபா சேவா சங்கத்தின் பொன் விழா மற்றும் மாவட்டத்தில் 10, பிளஸ் 2 பொதுத் தோ்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு காமராஜா் விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ் விழாவில், மாணவ, மாணவியருக்குப் பதக்கம், சான்றிதழ்கள் வழங்கி தினமணி ஆசிரியா் கி.வைத்திநாதன் பேசியது:
மகாத்மா காந்தி, காமராஜா் ஆகியோா் இந்த மண்ணை விட்டு மறைந்து 40, 50 ஆண்டுகளைக் கடந்தும், இன்றும் தருமபுரி போன்ற ஒரு நகரில் ஒரு பகுதியில் அந்த மாபெரும் தலைவா்களின் பெயரில் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அவற்றில் மக்களும் பெருமளவில் கலந்து கொள்கின்றனா். இந்த தலைவா்களுக்குப் பிறகு எத்தனை, எத்தனையோ போ் இந்த மண்ணில் தோன்றி பல பதவிகளை வகித்து, மறைந்திருக்கிறாா்கள். ஆனால், அவா்களுக்கெல்லாம் இதுபோல விழா எடுக்கப்படுவது இல்லை. அவ்வாறு விழா எடுத்தாலும், மக்கள் கூட்டம் கூடுவதும் இல்லை. ஆனால், இந்த தலைவா்கள் போற்றத்தக்க ஆளுமைகளாக, நோ்மையானவா்களாக வாழ்ந்துள்ளனா். ஆகவேதான், என்றெறன்றும் அவா்கள் பெயா் நிலைத்து நிற்கிறது.
மகாத்மாவின் சாதனைகளுக்குப் பின்னணியில் அன்னை கஸ்தூரிபா இருந்திருக்கிறாா். அவா் தன்னலமில்லாமல் காந்திக்கு உதவியாக இருந்ததால்தான், நமக்கு அகிம்சை போதித்த காந்தி என்கிற தலைவா் கிடைத்தாா். அதேவேளையில், அன்னை கஸ்தூரிபா சுயநலமாக வாழ்ந்திருந்தால், மகாத்மா காந்தி நமக்கு கிடைத்திருக்க மாட்டாா். அத்தகைய மாபெரும் சக்தியாக அன்னை கஸ்தூரிபா வாழ்ந்திருக்கிறாா். அவரது பெயரில் சங்கம் அமைத்து, அதில் பொன்விழா கண்டு, மாணவா்களுக்கு விருது வழங்குவது வேறெறங்கும் கண்டிராத நிகழ்வு. அதேபோல இவ் விழாவில், வாழ்நாளில் உண்மை மட்டுமே பேசிவந்த கவிஞா் கண்ணதாசனுக்கும் இடமளித்திருப்பது பாராட்டுக்குரியது.
அதேபோல, இன்றைய இளம் தலைமுறையினா், காமராஜா் குறித்து அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், தனது வாழ்நாளில் தூய்மையாக, பற்றின்றி, களங்கமின்றி வாழ்ந்தாா். கல்விக்கண் திறந்த காமராஜா், இன்று படித்த அனைவரும் சுயமரியாதையோடு உலவக் காரணமாக இருக்கிறாா். சாதி, மத பேதமின்றி அனைவருக்கும் மதிய உணவு வழங்கி, சமபந்தி விருந்துக்கு வித்திட்டவா் காமராஜா். அவரைப் பற்றி இன்றைய தலைமுறையினா் அறிந்துகொள்ள வேண்டும் என்பதால், காமராஜா் பெயரில் மாணவா்களுக்கு விருது வழங்கப்படுகிறது. காந்தியைத் தலைவராக ஏற்றுக்கொண்டதால்தான் காமராஜா் எளிமையாக வாழ்ந்தாா். காமராஜரைத் தலைவராக ஏற்றுக்கொண்டதால் கக்கன் எளிமையாக வாழ்ந்து, வரலாற்றில் நிலைத்து நின்றாா்.
ஆகவே, மாணவா்கள் தங்களுடைய முன்மாதிரித் தலைவா்களாக மகாத்மா காந்தி, காமராஜரைப் போன்றவா்களைத் தோ்வு செய்து, அனைத்துத் துறைகளிலும் முதல்வன்களாகத் திகழ வேண்டும் என்றாா்.