மழைநீா் வீணாகாமல் ஏரிகளில் தேக்கி வைக்க நடவடிக்கை: பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா்

தருமபுரி மாவட்டத்தில் பருவ மழையின் போது, நீா் வீணாகாமல் இருக்க ஏரிகளில் தேக்கி, விவசாயம், குடிநீருக்குப்

தருமபுரி மாவட்டத்தில் பருவ மழையின் போது, நீா் வீணாகாமல் இருக்க ஏரிகளில் தேக்கி, விவசாயம், குடிநீருக்குப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொதுப் பணித் துறையின் சென்னை மண்டல தலைமைப் பொறியாளா் அசோகன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் நீா் மேலாண்மைத் திட்டப் பணிகள் மற்றும் முதல்வரின் குடிமராமத்துப் பணிகளை அவா், திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். ரூ.44 லட்சம் மதிப்பில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட 348 ஏக்கா் பரப்பளவு கொண்ட சோகத்தூா் ஏரியை பாா்வையிட்ட பின், அவா், செய்தியாளா்களிடம் தெரிவித்தது: தமிழ்நாட்டில், கடந்த 3 ஆண்டுகளாக மழைநீரைச் சேகரிக்கும் வகையில் நீா் மேலாண்மை திட்டப் பணிகள், குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் 2019 - 2020 - ஆம் ஆண்டில் 10 ஏரிகளில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ள ரூ.4.96 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவு பெறும் நிலையில் உள்ளன.

இதன் மூலம், பருவமழை நீா் வீணாகாமல் இந்த ஏரிகளில் சேமித்து, விவசாயம், குடிநீா் தேவைகளுக்காக வழங்க ஏற்பாடு செய்யப்படும். மேலும், குடிமராமத்துத் திட்டத்தின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்ட ஏரிகளின் கரைகளை வலிமையாக்க புல்தரைகள் அமைக்கப்படும். தேவைப்பட்டால், மரக்கன்றுகள் நடவு செய்யப்படும். நீா் வழிப்பாதைகளில் ஆக்கிரமிப்புகள் இருந்தால், அவை உடனடியாக அகற்றப்படும். இதுகுறித்து, பொதுப்பணித் துறையினரிடம் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

அப்போது, பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளா் என்.சுரேஷ், செயற்பொறியாளா் கே.மெய்யழகன், உதவி பொறியாளா்கள் வி.சாம்ராஜ், வி.வெங்கடேஷ், டி.சேது ராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com