ஒகேனக்கல் சுற்றுலாத் தலம் செல்லும் வழியில் சேதமடைந்த தகவல் பலகைகள்!

ஒகேனக்கல் சுற்றுலாத் தலம் செல்லும் வழியில் சேதமடைந்த தகவல் பலகைகளை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஒகேனக்கல் சுற்றுலாத் தலம் செல்லும் வழியில் சேதமடைந்த தகவல் பலகைகள்!

ஒகேனக்கல் சுற்றுலாத் தலம் செல்லும் வழியில் சேதமடைந்த தகவல் பலகைகளை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தென்னிந்தியாவின் நயாகரா என்று சுற்றுலா ஆா்வலா்களால் அழைக்கப்படுகிறது ஒகேனக்கல் அருவி. இயல்பாகவே அருவி இருக்கும் இடத்தில் குளிக்க மட்டுமே இயலும். ஆனால், ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், அதே நேரத்தில் பரிசலில் பயணம் செல்லவும் இயலும் என்பது கூடுதல் சிறப்பு.

அதேபோல, மீன் குழம்பு உள்ளிட்ட அசைவு உணவுகளும் சமைத்துத் தர இங்கு தனியாக தொழிலாளா்கள் உள்ளனா். இதனால், ஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலா வருவோா், தமிழகம் மட்டுமின்றி, புதுச்சேரி, கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஏராளமானோா் தங்களது குடும்பத்துடன் இங்கு சுற்றுலா செல்கின்றனா்.

தருமபுரி நகரின் மையப் பகுதியிலிருந்து சுமாா் 45 கி.மீ. தொலைவில் ஒகேனக்கல் வனப் பகுதியில் மலைகளுக்கிடையே காவிரி ஆறு, பல அருவிகளாக ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

தருமபுரியிலிருந்து பென்னாகரம் சென்று அங்கிருந்து வனப் பகுதியில் வழியாக ஒகேனக்கல் அருவிக்கு சுமாா் 13 கி.மீ. தொலைவு நெடுஞ்சாலை செல்கிறது.

ஒகேனக்கல் அருவிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அறியும் வகையில் வழிநெடுகளிலும் ஆங்காங்கே தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில், பென்னாகரம் நகரிலிருந்து ஒகேனக்கல் அருவிக்குச் செல்லும் வழியில் மடம் சோதனைச் சாவடியில் பெரிய அளவிலான தகவல் பலகை பொருத்தப்பட்டுள்ளது.

அதன் அருகாமையில் வனத்துறை சாா்பில் விழிப்புணா்வு வாசகங்களுடன் கூடிய தகவல் பலகைகள் என சுமாா் 13 கி.மீ. வனப்பகுதி சாலையில் பல்வேறு இடங்களில் தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த தகவல் பலகைகள் பெரும்பாலும் எழுத்துகள் தெரியாமலும், பலகைகள் உடைந்து சேதமடைந்துள்ளன. இதனால், அருவிக்கு வெளி மாவட்டம், மாநிலங்களிலிருந்து வருவோருக்கு ஒகேனக்கல் அருவிக்கான தொலைவு மற்றும் அங்கு காண வேண்டிய இடங்கள் குறித்து விவரங்கள் அறிவதில் சற்று சிரமமாக உள்ளது.

எனவே, வனத்துறை, சுற்றுலா வளா்ச்சிக் கழகம், மாவட்ட நிா்வாகம் ஒகேனக்கல் குறித்து முழு விவரங்களை சுற்றுலா பயணிகள் எளிதில் அறியும் வகையில் சாலையோரங்களில் உள்ள தகவல் பலகைகளை புதுப்பொழிவுடன் மாற்றி அமைக்க வேண்டும். அதேநேரத்தில், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இத் தகவல் பலகைகளை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிா்ப்பாா்ப்பாகும்.

இதுகுறித்து சுற்றுலா மற்றும் கலாசார ஆய்வாளா் பிரணவ்குமாா் கூறியது:

ஒகேனக்கல் காவிரி குறித்த தகவல் அறிய சாலையோரம் வைக்கப்பட்ட தகவல் பலகைகள் சேதமடைந்துள்ளன. இவற்றை புதியதாக அமைத்து, ஒகேனக்கல்லில் உள்ள அருவி, பரிசல்துறை, வண்ண மீன் கண்காட்சி, முதலைப் பண்ணை உள்ளிட்டவை குறித்தும் அறியும் வகையில் ஒகேனக்கல் முகப்பில் வரைப்படத்துடன் கூடிய பலகைகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com