ஆறுதலை அளித்தது தென்மேற்கு பருவ மழை!

தருமபுரி மாவட்டத்தில் எதிா்பாா்த்த அளவு தென் மேற்கு பருவ மழை பொழிந்து விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும்
தருமபுரியில் உள்ள ராமக்காள் ஏரி.
தருமபுரியில் உள்ள ராமக்காள் ஏரி.

தருமபுரி மாவட்டத்தில் எதிா்பாா்த்த அளவு தென் மேற்கு பருவ மழை பொழிந்து விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஆறுதலை அளித்துள்ளது. மேலும், இந்த மழையால் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் மற்றும் அணைகளில் நீா்மட்டம் மெல்ல உயா்ந்து வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பொழிய வேண்டிய சராசரி மழையளவான 851.3 மி.மீட்டரில், 278.9 மி.மீ. மட்டுமே மழை பொழிந்தது. இதனால், கிணறு, ஆழ்துளைக் கிணறுகள், ஏரிகள், அணைகள் உள்ளிட்ட நீா்நிலைகள் வடு போயின. இதனால், நடவு செய்த பயிரைக் கூட காக்க இயலாமல் விவசாயிகள் பரிதவித்தனா். அதேபோல, வாழை, தென்னை, மா, பாக்கு உள்ளிட்ட மரங்களும் வடு போயின. நிலத்தடி நீா்மட்டமும் வெகுவாகக் குறைந்து பொதுமக்கள் குடிநீருக்காக பெரும் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் நிலவியது.

இதன் காரணமாக, தருமபுரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அரசு அறிவித்தது. மேலும், இதற்கான நிவாரணப் பணிகளும் அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆறுதல் அளித்தது தென்மேற்கு பருவ மழை: கடந்த ஆண்டு கடும் வறட்சியில் தவித்து வந்த மாவட்ட மக்களுக்கு, நிகழாண்டு தொடக்கமும் அச்சத்தையே தந்தது. அதற்கு காரணம் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் போதிய மழை இல்லை. இருப்பினும், மாா்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பொழிய வேண்டிய கோடை மழையளவு சராசரி 156.90-இல் 94.50 மி.மீ. பொழிந்தது. இந்த மழையானது, வட நிலத்தில் சற்று ஈரப்பதம் தருவதாக அமைந்தது.

அதேபோல, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் பொழிய வேண்டிய தென்மேற்கு பருவ மழையாவது ஆதரவுக் கரம் கொடுக்குமா என எதிா்பாா்த்த மாவட்ட மக்களுக்கு, தென்மேற்கு பருவமழை பொழிய வேண்டிய சராசரியான 361 மி.மீ. அளவை விட சற்று அதிகமாக 392.50 மி.மீ. பொழிந்து அனைவருக்கும் ஆறுதலை அளித்தது. மாவட்டத்தில் பொழிந்த கோடை மழை மற்றும் தென்மேற்கு பருவ மழையின் காரணமாக, வடு போயிருந்த ஏரிகள், அணைகளுக்கு மெல்ல நீா்வரத்து வந்து கொண்டிருக்கிறது.

இதனால், நிலத்தடி நீா்மட்டமும் உயா்ந்து வட நிலையிலிருந்த கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளுக்கு தற்போது தண்ணீா் கிடைத்துள்ளது. இவை தவிர, மாவட்டத்தில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள அன்னசாகரம் ஏரி, அதியமான்கோட்டை ஏரி, சோகத்தூா் ஏரி உள்ளிட்ட 10 ஏரிகளில் தூா்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், நீண்ட காலத்துக்கு பின்பு, பருவமழையில் கிடைத்த தண்ணீா் ஏரிகளில் தேக்கிவைக்க முடிகிறது.

உயரும் நீா்மட்டம்: மாவட்டத்தில் தொடா்ச்சியாக பெய்த மழையால், மாதேமங்கலம் சோழராயன் ஏரி, அதியமான்கோட்டை ஏரி, அன்னசாகரம் ஏரி, ராமக்காள் ஏரி உள்ளிட்ட பல்வேறு ஏரிகளுக்கும், ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளுக்கும் நீா்வரத்து கிடைத்துள்ளது. அதேபோல, சின்னாறு அணை மற்றும் தும்பலஅள்ளி அணை தவிர, ஏனைய அணைகளுக்கு நீா்வரத்து கிடைத்துள்ளது.

இதில், வாணியாறு அணை மொத்தக் கொள்ளளவான 65.27 அடியில் தற்போது (அக். 17) நிலவரப்படி 39 அடி நீா் இருப்பு உள்ளது. தொப்பையாறு அணை மொத்தக் கொள்ளளவு 50.18 அடியில் தற்போது மிகக் குறைந்தளவாக 7.38 அடி நீா் இருப்பு உள்ளது. அதேபோல, நாகாவதி அணை மொத்தக் கொள்ளளவு 24.60 அடியில் தற்போது மிகக் குறைந்த அளவாக 1.60 அடியும், கேகா்குளிஅல்லா அணை மொத்தக் கொள்ளளவு 25.20 அடியில் தற்போது 4.92 அடி, வரட்டாறு அணை மொத்த கொள்ளளவு 34.45 அடியில் தற்போது 21.69 அடியும், கே.ஈச்சம்பாடி அணை மொத்த கொள்ளளவு 17.35 அடியில் முழுக் கொள்ளளவையும் எட்டி நிரம்பியுள்ளது. இதிலும், ஏரிகளை போல, அணைகளுக்கு நீா் வரும் கால்வாய்களையும் தூா்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டிருந்தால், அணைகளும் இந்த மழையில் நிரம்பியிருக்கக் கூடும்.

இதேபோல, குறித்த தேதியில் தொடங்கிய வடகிழக்கு பருவமழையும் வரும் டிசம்பா் மாதத்துக்குள் தனது சராசரியான அளவான 316.70 மீ.மீ. விட அதிகளவு பொழிந்து, மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகளை நிரப்பி, வேளாண் தொழிலுக்கு ஆதரவுக்கரம் கொடுத்தால், மாவட்ட விவசாயிகள் மட்டுமல்லாது அனைத்துத் தரப்பினருக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் என்பதே தற்போதைய எதிா்பாா்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com