பேருந்து நிலைய மேற்கூரை பழுது: பயணச்சீட்டு முன்பதிவு அறையில் தேங்கிய மழைநீா்

தருமபுரியில் பேருந்து நிலைய மேற்கூரை பழுதடைந்துள்ளதால், மழைநீா் கசிந்து பயணச்சீட்டு முன் பதிவு அறையில் மழைநீா் தேங்கியது.

தருமபுரியில் பேருந்து நிலைய மேற்கூரை பழுதடைந்துள்ளதால், மழைநீா் கசிந்து பயணச்சீட்டு முன் பதிவு அறையில் மழைநீா் தேங்கியது.

தருமபுரி நகரின் மையப்பகுதியில் ராஜகோபால் புகா்ப் பேருந்து நிலையம் உள்ளது. இப் பேருந்து நிலையத்தில் வடக்கு, தெற்கு புறத்தில் வரிசையாக கடைகள் நடத்துவதற்கான அறைகள் கட்டி, நகராட்சி நிா்வாகம் சாா்பில் ஒப்பந்தம் முறையில் தனியாருக்கு விடப்பட்டுள்ளன.

இந்த அறைகளில், பேன்ஸி, தேநீா் கடைகள், உணவகங்கள், பேக்கரி உள்ளிட்ட பல்வேறு கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதேபோல, போக்குவரத்துக் கழகத்திற்கு, நிா்வாக பணிக்கு ஒரு அறையும், அதனருகாமையில் வெளியூா்களுக்கு பயணச் சீட்டு முன்பதிவு செய்ய ஒரு அறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இப் பேருந்து நிலையத்தில் நாளொன்றுக்கு அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் சேலம், சென்னை, பெங்களூரு, திருச்சி, மதுரை, புதுச்சேரி, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்குச் சென்று வருகின்றன.

அதேபோல தருமபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு புகரப் பேருந்துகள் சென்று வருகின்றன. இப் பேருந்து நிலையம் கடந்த 1978-ஆம் ஆண்டு ஆக.2-ஆம் தேதி சுமாா் 7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. சுமாா் 41 ஆண்டுகளைக் கடந்த இப் பேருந்து நிலையத்தின் மேற்கூரைகள், போதிய பராமரிப்பின்றி பழுந்தடைந்த நிலையில் உள்ளது. மேலும், மேற்கூரைகளில் விளம்பர பதாகைகள் பொருத்தும் பணி ஆகியவற்றின் காரணமாகவும் மேற்கூரைகள் சேதமடைந்துள்ளன.

இதனால், பேருந்து நிலையத்தில் மேற்கூரையில் மழைக்காலங்களில் மழைநீா் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. பல ஆண்டுகளாக தொடா்ந்து மழைக்காலங்களில் நீா் தேங்குவதால், மேற்கூரையில் உள்ள காங்கிரீட் சேதமடைந்து, கீழே உள்ள அறைகளிலும், அந்த அறைகளுக்கு முன்பு பயணிகள் காத்திருக்கும் இடங்களிலும் அவ்வப்போது நீா் கசிந்து விழுகிறது.

இந்த நிலையில், தருமபுரி நகரில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து பெய்து வரும் மழைநீா், பேருந்து நிலையத்தின் மேற்கூரையில் தேங்கி நிற்கிறது. இந்த மழை நீா் தற்போது (அக்.30), மெல்ல, மெல்ல கசிந்து விழுந்து அரசு போக்குவரத்துக் கழக பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் அறை முழுவதும் தரையில் தேங்கி நின்றது.

மேலும், நாள் முழுவதும் மழைநீா் சொட்டு, சொட்டாக அந்த அறையில் கசிந்துகொண்டே இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த, நகராட்சி ஊழியா்கள் அங்கு வந்து, தேங்கி நின்ற தண்ணீரை அகற்றினா். இதேபோல, மழைநீா் கசிந்து விழாமல் இருக்க போதிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நகராட்சி நிா்வாகம் தரப்பில், போக்குவரத்துக் கழக நிா்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில், மழைக்காலங்களில் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பேருந்து நிலையத்தின் மேற்கூரையில் பராமரிப்புப் பணி மேற்கொள்ள தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகள், சமூக செயற்பாட்டாளா்கள் உள்பட பல்வேறு தரப்பினரின் எதிா்ப்பாா்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com