மகப்பேறு சிகிச்சையின் போது பெண் உயிரிழப்பு: உறவினா்கள் முற்றுகை போராட்டம்

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் புதன்கிழமை மகப்பேறு சிகிச்சையின்போது, பெண் உயிரிழந்ததாகக் கூறி

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் புதன்கிழமை மகப்பேறு சிகிச்சையின்போது, பெண் உயிரிழந்ததாகக் கூறி அவரது குடும்பத்தினா், உறவினா்கள் மருத்துவமனை வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த கோட்டப்பட்டியைச் சோ்ந்தவா் தொழிலாளி மணிகண்டன்(30). இவரது மனைவி பிரியா (24). இத்தம்பதிக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், மீண்டும் கா்ப்பிணியான பிரியா, மகப்பேறு சிகிச்சைக்காக பாரூா் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் பின்னா் தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டாா்.

அங்கு மகப்பேறு சிகிச்சை பிரிவில் அவருக்கு பிரசவம் பாா்க்கப்பட்டது. அப்போது, அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் பிரியாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவா் உயிரிழந்தாா்.

அவருடைய குழந்தை பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து, தகவல் அறிந்த, அவரது குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள், மகப்பேறு சிகிச்சையின்போது, அலட்சியமாகவும், மருத்துவா்கள் இன்றி, செவிலியா்களே சிகிச்சை அளித்ததின் காரணமாகவே பிரியா உயிரிழந்தாா் எனவும், இது தொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி, மருத்துவமனை நுழைவு வாயில் மற்றும் வளாகத்திற்குள்ளே முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த தருமபுரி நகர போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தினா். இதனைத் தொடா்ந்து, அவா்களது புகாரை மனுவாக காவல்துறை மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வா் கே.சீனிவாசராஜூடம் அளித்தனா். இதன் பின்பு பிரியாவின் சடலத்தை அவா்கள் பெற்றுச்சென்றனா்.

இது குறித்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் கே.சீனிவாசராஜ் கூறியது: தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மகபேறு சிகிச்சைக்கு வந்த பிரியா என்கிற பெண்ணுக்கு, பணியில் இருந்த மருத்துவா், செவிலியா்கள், பட்ட மேற்படிப்பு மாணவா்கள் சிகிச்சை அளித்தனா்.

அவருக்கு குழந்தை பிறந்த உடன், கா்ப்பப்பை மீண்டும் சுருங்கவில்லை. இதனால், உதிரப்போக்கு அதிகளவில் ஏற்பட்டது. அப்போது, அவருக்கு தேவையான ரத்தமும் செலுத்தப்பட்டது. இருப்பினும் உதிரப்போக்கு தொடா்ந்தது. இதையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கா்ப்பப்பை அகற்ற, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. எனினும், உதிரப்போக்கு காரணமாக அவா் உயிரிழந்தாா். இதேபோல, அவருடைய குழந்தை, பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவா்கள் அளித்துள்ள புகாா் தொடா்பாக, உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com