காவிரிக்கு புத்துயிர் அளிக்க மரக் கன்றுகளை வளர்ப்போம்: சத்குரு ஜக்கி வாசுதேவ்

காவிரிக்கு புத்துயிர் அளிக்க மரக் கன்றுகளை வளர்க்க வேண்டும் என்று ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார்.

காவிரிக்கு புத்துயிர் அளிக்க மரக் கன்றுகளை வளர்க்க வேண்டும் என்று ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார்.
 "காவேரி கூக்குரல்' என்கிற பெயரில் மரக் கன்றுகளை வளர்ப்போம் என்ற விழிப்புணர்வு முழக்கத்துடன் இருசக்கர வாகன பயணத்தை சத்குரு ஜக்கி வாசுதேவ் மேற்கொண்டு வருகிறார்.
 கர்நாடக மாநிலத்துக்குள்பட்ட தலைக்காவிரியில் தனது குழுவினருடன் அண்மையில் பயணத்தை தொடங்கிய அவர், பல்வேறு பகுதிகள் வழியாக புதன்கிழமை (செப். 11) கிருஷ்ணகிரி மாவட்டத்துக்குள்பட்ட ஒசூர், தருமபுரி நகருக்கு வருகை தந்தார்.
 அப்போது, தருமபுரி சோகத்தூரில் உள்ள விஜய் மில்லியனியம் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசியது:-
 நமக்கெல்லாம் அமிர்தமாக இருந்த தண்ணீர் தற்போது நஞ்சாக மாறும் சூழல் நிலவுகிறது. ஆறு, குளம், கிணறு ஆகியவற்றில் இருக்கும் நீருக்கு மூலம் என்பது மழை மட்டுமே. மழை பொழிந்தால் மட்டுமே அந்த தண்ணீர் ஆறாகவும், குளம் மற்றும் கிணற்றில் நீராகவும் கிடைக்கிறது.
 ஆறுகளில், நீர்நிலைகளில் தேக்கிவைக்கும் நீரின் அளவைவிட, 8 மடங்கு தண்ணீர் நிலத்தில் சேகரிக்க இயலும். தென் இந்திய மண்ணை போல உலகில் எங்கும் காண இயலாது. தென் இந்தியாவில் ஒருபிடி மண்ணில் 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் நுண்ணுயிர்கள் உள்ளன. அத்தகைய வளமான மண்ணை பாலைவனமாக நாம் மாற்றிக் கொண்டிருக்கிறோம். மண் வளமாக இருந்தால் மட்டுமே உடல் நலமாக இருக்கும். தன்னுடைய நிலத்தில் மரக் கன்றுகளை நட்டு வளர்க்கும் விவசாயிக்கு, அதனை வெட்டிக்கொள்ளவோ அல்லது விற்பனை செய்யவோ இயலாத வகையில் சட்டம் உள்ளது.
 ஒரு தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பொருள் எங்கும் விற்பனை செய்துகொள்ளலாம் என கூறும் சட்டம், விவசாயிக்கும் தனது நிலத்தில் விளைவிக்கும் மரங்களை வெட்டி, விற்பனை செய்து வருவாய் ஈட்டிக்கொள்ள உதவ வேண்டும்.
 4 ஆண்டுகள் வரை மரக்கன்றுகளை வளர்க்க மானியம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கர்நாடக, தமிழக அரசுகள் உறுதி அளித்துள்ளன.
 காவிரி பாயும் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 12 ஆண்டுகளில் சுமார் 47 ஆயிரம் பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். வளமான மண், தேவையான நீர் தற்போது இல்லை. மண்ணை வளமாக்க இலைகள், சாணம் தேவை. 12 ஆயிரம் ஆண்டுகளாக நமது முன்னோர்கள் பாதுகாத்து வந்த மண்ணை, கடந்த இரண்டு தலைமுறைகளில் உபயோகமற்றதாக மாற்றிவிட்டோம்.
 ஆகவே, வளமான மண்ணையும், நீரையும் வருங்கால தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்ல வேண்டும். 50 ஆண்டுகளுக்கு முன்பு நாம் கண்ட அதே காவிரியை நம் தலைமுறையினருக்கு அளிக்க வேண்டும். விவசாயிகள் தற்கொலைகளுக்குத் தீர்வு காண வேண்டும் எனில் மரக் கன்றுகளை நட்டு வளர்ப்போம்.
 வருகிற 12 ஆண்டுகளில் 242 கோடி மரக் கன்றுகளை வளர்க்க காவேரி கூக்குரல் முடிவு செய்துள்ளது. அவ்வாறு மரங்களை நாம் வளர்த்துவிட்டால், மீண்டும் காவிரி புத்துயிர் பெற்று செழிப்பாக பாய்ந்தோடுவது உறுதி. இதற்கு விவசாயிகள், அனைத்துத் தரப்பினரும் துணை நிற்க வேண்டும் என்றார்.
 நிகழ்ச்சியில் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி, விவசாயிகள், பள்ளி மாணவ, மாணவியர், காவிரி கூக்குரல் அமைப்பினர் திரளானோர் கலந்துகொண்டனர்.
 "காவிரி கரையில் 242 கோடி மரங்கள் நட வேண்டும்'
 ஒசூர், செப். 11: காவிரி கரையில் 242 கோடி மரங்கள் நடுவதற்கு விவசாயிகளும், தமிழக அரசும் துணை புரிய வேண்டும் என ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார்.
 காவிரி நதிக்கு புத்துயிர் ஊட்டவும், அதை சார்ந்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் "காவேரி கூக்குரல்' இயக்கத்தைத் தொடங்கியுள்ள சத்குரு ஜக்கி வாசுதேவ், காவிரி வடிநிலப் பகுதிகளில் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரக் கன்றுகளை நட திட்டமிட்டுவருகிறார்.
 இந்த இயக்கத்துக்கு, விவசாயிகள், அரசுகளின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில், சத்குரு இருசக்கர வாகனப் பயணத்தை செப். 3-இல் தலைக்காவிரியில் பயணத்தை தொடங்கிய ஜக்கிவாசுதேவ் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியான மடிக்கேரி, ஹனசூரு, மைசூரு, மாண்டியா, கொள்ளேகால், பெங்களூரு வழியாக தமிழக எல்லையான ஒசூருக்கு புதன்கிழமை காலை வந்தார்.
 அத்திப்பள்ளியில் பிஎம்சி கல்லூரிச் செயலர் குமார், ஹோஸ்டியா சங்க முன்னாள் தலைவர் வெற்றி.ஞானசேகரன், செயலர் வடிவேலு உள்ளிடட 500-க்கும் மேற்பட்டோர் வரவேற்பு அளித்தார்.
 இதனைத் தொடர்ந்து, ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஜக்கி வாசுதேவ் பேசியது:-
 மழை நீரை அதிக அளவில் பெற அதிக மரங்களை நட வேண்டும். காவிரியின் கரையோரத்தில் உள்ள விவசாய நிலங்களில் மரங்களை நடுவதுடன் மூலம் அதிக மழை கிடைக்கும். குறிப்பாக அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்களை நட திட்டமிட்டுள்ளோம். அதற்கு விவசாயிகளும், தமிழக அரசும் துணை புரிய வேண்டும் என்றார்.
 கூட்டத்தில் மக்களவை முன்னாள் துணைத் தலைவர் மு.தம்பிதுரை, மக்களவை உறுப்பினர் செல்லகுமார், ஒசூர் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, முன்னாள் எம்எல்ஏ கே.ஏ.மனோகரன், ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வர் ரங்கநாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 பின்னர் அவர் இருசக்கர விழிப்புணர்வுப் பேரணியைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி, தருமபுரிக்குச் சென்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com