காவிரி ஆற்றுவெள்ள நீரில் தொடரும் பரிசல் பயணம்!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளம் அதிகரித்து வரும்போது, தடையைப் பொருள்படுத்தாமல் பரிசல் பயணம் தொடர்வதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
காவிரி ஆற்றுவெள்ள நீரில் தொடரும் பரிசல் பயணம்!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளம் அதிகரித்து வரும்போது, தடையைப் பொருள்படுத்தாமல் பரிசல் பயணம் தொடர்வதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனைத் தடுக்க கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்திவருகின்றனர்.
 தருமபுரி மாவட்டத்துக்குள்பட்ட ஒகேனக்கல்லில் காவிரி ஆறு அருவிகளாக ஆர்ப்பரித்து பின்னர் மேட்டூர் அணைக்குச் சென்றடைகிறது. தென் இந்தியாவின் நயாகரா என்றழைக்கப்படும் ஒகேனக்கல் அருவியைக் காண தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் சுற்றுலா வருகின்றனர். அவ்வாறு வருவோர் அருவிகளில் குளிப்பதோடு, ஆற்றில் பரிசல் பயணமும் மேற்கொள்வர்.
 பரிசல் துறை பயணத்துக்கு நிபந்தனைகள்: பரிசல் பயணத்துக்காக, பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில், மாமரத்துக்கடவு பரிசல்துறை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுற்றுலாப் பயணிகள் பரிசலில் அழைத்துச் செல்ல 400-க்கும் மேற்பட்ட பரிசல் ஓட்டிகள் உள்ளனர். பரிசலில் பயணம் மேற்கொள்வோருக்குப் பாதுகாப்பு உடை (லைப் ஜாக்கெட்) வழங்கப்படுகிறது. மேலும், பரிசல் பயணத்துக்கு குறிப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே ஆள்களை அழைத்துச்செல்ல வேண்டும். கைக்குழந்தைகளை அழைத்துச் செல்லக் கூடாது. ஆற்றில் மணல்மேடுகளில் ஆள்களை இறக்கக் கூடாது. மாலை மற்றும் இரவு நேரங்களில் பரிசல் இயக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
 இதேபோல, ஆற்றில் 15 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர்வரத்து இருக்கும்போது, பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்து வருகிறது.
 தடையை மீறி பரிசல் பயணம்: இந்த வகையில், கடந்த 7 நாள்களுக்கு முன்னர் கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட நீர் பெருக்கெடுத்து, நொடிக்கு சுமார் 70 ஆயிரம் கன அடி அளவுக்கு நீர்வரத்து இருந்து வருகிறது. இதனால் பயணிகள் பாதுகாப்புக் கருதி, மாவட்ட நிர்வாகம் ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் இயக்கத் தடை விதித்துள்ளது.
 இந்த நிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த மனோ என்பவர் தனது மனைவி அஞ்சலாட்சி (51), மகள் மோஷிகா, கார் ஓட்டுநர் கந்தன் ஆகியோருடன் புதன்கிழமை (செப். 11) பிலிகுண்டுலு பகுதி காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொண்டார். அப்போது, ஆற்றில் பரிசல் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், அஞ்சலாட்சி நீரில் அடித்துச் செல்லப்பட்டார். ஏனைய மூவரும் மீட்கப்பட்டனர். ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட பெண்ணை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.
 இந்த நிலையில், 2000-ஆம் ஆண்டுகளில் ஒகேனக்கல்லில் பரிசல் கவிழ்ந்து 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து, பரிசல் பயணம் மேற்கொள்வோர் "லைப் ஜாக்கெட்' அணிய வேண்டும் என்பது தொடர்பான கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்தது.
 கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பரிசல் கவிழ்ந்ததில், சென்னையில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மீண்டும் ஆற்றில் உயிரிழப்புகள் நிகழக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு, நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டன. இருப்பினும், விதிகளை மீறி ஆற்றில் பரிசல் இயக்கப்படும் போது உயிரிழப்புகள் நிகழ்வது வாடிக்கையாவிட்டது.
 கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும்: ஆற்றின் அழகை ரசிக்க வருவோர் வெள்ள நீரின் ஆபத்தை உணராமல் பரிசலில் செல்வதால், விபத்து ஏற்பட்டு வாழ்வை இழக்க நேரிகிறது. இதனால், அவர்களது குடும்பத்தினரும் துயரம் அடைகின்றனர். உயிரிழப்புகளைத் தடுக்க வெள்ளக் காலங்களில் போலீஸார், தீயணைப்பு, மீட்புக் குழுவினர், வருவாய்த் துறையினர், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், பரிசல் ஓட்டிகள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைத்து, அக்குழுவினர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைக்குள்பட்ட காவிரி ஆற்றுப் பகுதிகளில் அவ்வப்போது ரோந்துப் பணி மேற்கொண்டு, தடையை மீறி பரிசல் இயக்குவதை கண்காணிக்க வேண்டும். இதற்காக இரண்டு மாவட்ட அலுவலர்கள் அடங்கிய கூட்டுக்குழுவை ஏற்படுத்த வேண்டும்.
 மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கு தடைக் காலங்களில் பரிசலில் செல்வதால் நிகழும் விளைவுகள் குறித்து அறிந்துகொள்ளும் வகையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் ஒகேனக்கல் பேருந்து நிலையம், தங்கும் விடுதிகள், அருவி கரையோரங்களில் விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய பதாகைகளை பொருத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
 சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு: சார்- ஆட்சியர் தகவல்
 வெள்ளம் அதிகரிக்கும் நேரங்களில் பரிசல் பயணத்துக்கு தடை விதிப்பதோடு, அரசு அலுவலர்கள், போலீஸார், சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று தருமபுரி சார்-ஆட்சியர் ம.ப.சிவன்அருள் தெரிவித்துள்ளார்.
 இதுதொடர்பாக அவர் மேலும் கூறியது: மலும், வனத் துறையினரும் ஆங்காங்கே கண்காணித்து வருகின்றனர். இருப்பினும், தடையை மீறி ஆற்றில் சிலர் பரிசல் இயக்குவதால் இத்தகைய நிகழ்வுகள் நேரிடுகின்றன.
 இவற்றைத் தவிர்க்க, தங்கும் விடுதி நிர்வாகிகளிடம் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சோதனைச் சாவடிகளில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல, பயணிகளும் ஆபத்தான பரிசல் பயணம் குறித்து போதிய விழிப்புணர்வு அடைய வேண்டும் என்றார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com