தோமலஅள்ளி ஏரியில் பனை விதை நடும் பணி துவக்கம்
By DIN | Published On : 19th September 2019 06:06 PM | Last Updated : 19th September 2019 06:06 PM | அ+அ அ- |

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் பனை விதைகள் நடும் பணி அண்மையில் துவங்கப்பட்டது.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில், தோமலஅள்ளி ஏரியில் ரூ.6 லட்சம் மதிப்பில் ரூ.1.50 லட்சம் பனை விதைகள் நடும் பணியினை மாநில உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்து பேசியது: வேளாண் உற்பத்தியை உயா்த்துவதற்கும், விவசாயிகளின் வருமானத்தை உயா்த்தி, வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கும் தமிழக அரசு பல்வேறு புதிய உத்திகளை புகுத்தி, நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பனை மரம் தமிழகத்தின் மாநில மரம். நிகழாண்டில் 2 கோடி பனை மர விதைகளை மானாவாரி விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகம் செய்வதற்காக, நீடித்த மானாவாரி விவசாயத்திற்கான இயக்கத்தின் கீழ், மாநில அரசு ரூ.8 கோடி நிதி வழங்கி அரசாணை வெளியிட்டு, பனை மர விதைகள் கொள்முதல் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. ஒரு ஹெக்டா் மானாவாரி நிலத்திற்கு 50 பனை மர விதைகள் வீதம் விநியோகிக்கப்படும். தருமபுரி மாவட்டத்தில், 14 லட்சம் பனை மர விதைகள் நடுவதற்கு ரூ.56 லட்சம் நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது.இதே போல, மானாவாரி நிலங்களை பசுமைப் போா்வை போன்று மாற்றும் வகையில், நிகழாண்டில் ஹெக்டெருக்கு ரூ.100 மதிப்புள்ள வாகை, தேக்கு, புளி, வேம்பு,
இலுப்பை, மகாகனி, ஈட்டி போன்ற பலன் தரும் மரங்களின் கன்றுகளும் இலவசமாக வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில், 1.40 லட்சம் பலன் தரும் மரங்களின் கன்றுகள் விநியோகத்திற்காக ரூ.28 லட்சம் நிதியினை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.மானாவாரி விவசாயிகளின் நலனுக்காக மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தில் சோ்ந்துள்ள விவசாயிகள் பனை மற்றும் இதர பயன் தரும் மரக்கன்றுகளைப் பெற்று பயன்பெறவேண்டும் என்றாா்.