தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பரவலாக மழை: போச்சம்பள்ளி அருகே 3 வீடுகள் சேதம்

தருமபுரி  மாவட்டத்தில்,  கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் வெயிலும், இரவில் லேசானது முதல் மிதமான மழையும் அவ்வப்போது பெய்து வருகிறது. 

தருமபுரி  மாவட்டத்தில்,  கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் வெயிலும், இரவில் லேசானது முதல் மிதமான மழையும் அவ்வப்போது பெய்து வருகிறது. 
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பகல் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக இருந்தது. இதையடுத்து, மாலை மற்றும் இரவில் லேசான மழை பொழிந்தது. இதைத் தொடர்ந்து, நள்ளிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக இடி, மின்னலுடன் மழை பொழிந்தது. இந்த மழையின் காரணமாக, சாலையோரங்களில், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
தடுப்பணை உடைப்பு:  தருமபுரி அருகே உள்ள வத்தல்மலை மலைப் பகுதியில் பொழியும் மழைநீர்,  மலைஅடிவாரத்திலிருந்து ஜாலாற்றின் வழியாக மாதேமங்கலம் சோழாராயன் ஏரியைச் சென்றடையும். பின்னர் அங்கிருந்து அதியமான்கோட்டை ஏரி,  ஒட்டப்பட்டி ஏரி, அன்னசாகரம் ஏரி என பல்வேறு ஏரிகளை நிரப்பி சனத்குமார் நதி வழியாக, இருமத்தூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் கலக்கும். இந்த மழைநீரைச் சேமிக்க, வத்தல்மலை அடிவாரத்தில் தடுப்பணைகள் உள்ளன. இந்த ஆற்றின் குறுக்கே அண்மையில் ஒரு தடுப்பணை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த தொடர்மழையால், மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன்காரணமாக, அண்மையில் கட்டியத் தடுப்பணை உடைந்தது. இதனால் தண்ணீர் பெருக்கெடுத்து அருகிலிருந்த சாலையிலும் ஓடியது.
பாலக்கோட்டில் 105 மி.மீ.
தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையளவு ( மி.மீட்டரில்): தருமபுரி 76,  அரூர் 23,  பாப்பிரெட்டிப்பட்டி 8,  பாலக்கோடு 105, மாரண்டஅள்ளி 10.2,  பென்னாகரம் 30,  ஒகேனக்கல் 64 என மொத்தம் 316.2  மழை பெய்துள்ளது. மாவட்டத்தின் சராசரி 45.17.
கிருஷ்ணகிரியில்... கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், போச்சம்பள்ளி அருகே 3 வீடுகள் சேதம் அடைந்தன. வீட்டுக்குள் மழை நீர் புகுந்ததால் குடியிருப்போர் சிரமமடைந்தனர்.  வெப்பச்சலனம் காரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரியில் திங்கள்கிழமை பெய்த மழையினால், சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கியது. கழிவுநீர் கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்புகளால் காரணமாக மழைநீருடன், கழிவுநீரும் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள், சாலையில் நடந்து செல்வோர் பாதிக்கப்பட்டனர். 
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் கடந்த இரு நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு, போச்சம்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 2 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழை நீர் புகுந்தது. குடியிருப்போர் இரவு முழுவதும் தூங்க முடியாமல் அவதிக்குள்ளாயினர்.  மேலும், வறண்ட நிலையில் காணப்பட்ட ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். போச்சம்பள்ளி அருகே எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சங்கீதா, பழைய போச்சம்பள்ளியைச் சேர்ந்த அகமது பாஷா உள்ளிட்ட 3 பேரின் வீடுகள் சேதம் அடைந்தன. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 
மழையளவு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8 மணி வரையில் பெய்த மழை அளவு (மி.மீ): அஞ்செட்டி - 1.2, தேன்கனிக்கோட்டை - 5, நெடுங்கல் -9, சூளகிரி  - 9, பெனுகொண்டாபுரம் - 13.2, ஒசூர் - 19.2, கிருஷ்ணகிரி - 32.2, பாரூர் - 67, போச்சம்பள்ளி - 90.4.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com