6 வழிச்சாலை: ஒசூரில் கருத்துக் கேட்புக் கூட்டம்

ஒசூரைச் சுற்றி அமையவுள்ள புதிய 6 வழிச்சாலை குறித்து விவசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம்,

ஒசூரைச் சுற்றி அமையவுள்ள புதிய 6 வழிச்சாலை குறித்து விவசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம்,  மாவட்ட வன அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் தலைமை வகித்தார். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் மூலம் சேட்டிலைட் டவுன் ரிங் ரோடு)  (எஸ்டிஆர்ஆர்)  புதிய 6 வழிச்சாலை அமைக்கவுள்ளது.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 45 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்படும் இந்த சாலை 25 கிராமங்கள் வழியாகச் செல்கிறது. 23 கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் ஏற்கெனவே நடந்து முடிந்துள்ள நிலையில்,  மீதமுள்ள 2 கிராம மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
தேன்கனிக்கோட்டை வட்டம், சாத்தனூர் மற்றும் பெத்தமதகொண்டப்பள்ளி ஆகிய இரண்டு கிராம மக்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். பொதுமக்களிடம் இது தொடர்பாக கருத்துக் கேட்கப்பட்டது. அப்போது சாலைப் பணிக்கு ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். சாலையில் சீரான இடைவெளியில் நீர்ப்பாசன குழாய்களை கொண்டு செல்வதற்கு வழிகள் விட வேண்டும். குறிப்பிட்ட 5.058 கி.மீ.க்கு இரு புறங்களிலும் அணுகு சாலைகள் அமைக்க வேண்டும்.  நிலம் வழங்கும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். சாலைப் பணிக்கு நன்செய் நிலங்களை தவிர்க்க வேண்டும் ஆகிய கோரிக்ககைளை பொதுமக்கள் முன்வைத்தனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசுகையில்,  சாலைப் பணிக்கு வழங்கப்படும் நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,  சாலையில் சீரான இடைவெளியில் நீர்ப்பாசன குழாய்களை கொண்டு செல்வதற்கு வழிகள் அமைக்க வேண்டும், அணுகு சாலைகள் அமைக்க வேண்டும் எனவும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய நிர்வாகிகளை அறிவுறுத்தினார். தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் ஒசூர் வருவாய் கோட்டாட்சியர் குமரேசன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பழனிசாமி, தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திட்ட மேலாளர் சோமசேகர்,  உதவிப் பொறியாளர் செல்வகணபதி, தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் பாலசுந்தரம், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com