ஆவணங்கள் சரிபார்ப்பில் பங்கேற்காத மாணவர்: மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு தகவல் அனுப்பிவைப்பு

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த மாணவர், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதது குறித்து மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு தகவல் அனுப்பிவைக்கப்பட்டுள்


தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த மாணவர், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதது குறித்து மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு தகவல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து கல்லூரியில் மாணவர் சேர்ந்த விவகாரத்தைத் தொடர்ந்து, அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்படுகின்றன.  அந்த வகையில், தருமபுரி மருத்துவக் கல்லூரியில் கடந்த 20-ஆம் தேதி துணை முதல்வர் மற்றும் மூன்று துறைத் தலைவர்கள் உள்ளிடக்கிய ஐந்து பேர் அடங்கிய குழுவினர்,  எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களின் சான்றிதழ்களைச் சரிபார்த்தனர். 
இதில்,  மாணவர்களின் கல்வி சான்றிதழ்,  நீட் தேர்வு நுழைவுச் சீட்டு,  மதிப்பெண், இடம் ஒதுக்கீடு உள்ளிட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. இந்தச் சான்றிதழ் சரிபார்ப்பில், தருமபுரி மருத்துவக் கல்லூரியில் மொத்தம் உள்ள 100 மாணவர்களில் 99 பேர் பங்கேற்றனர்.  அவர்களது சான்றிதழ்கள் அனைத்து சரியான முறையில் இருப்பது தெரியவந்தது. 
இருப்பினும்,  முதலாம் ஆண்டில் சேர்ந்த திருப்பத்தூரைச் சேர்ந்த மாணவர் முகமது இர்பான் என்பவர் மட்டும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கவில்லை.  
இதுகுறித்து, விசாரித்த போது,  அந்த மாணவர் கடந்த 8-ஆம் தேதி முதல் கல்லூரிக்கு வராமல் விடுப்பில் இருப்பது சான்றிதழ் சரிபார்ப்புக் குழுவினருக்குத் தெரியவந்துள்ளது.  இது தொடர்பான தகவலை மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சீனிவாசராஜ் கூறியது: 
தருமபுரி மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவக் கல்வியில் சேர்ந்த மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி கடந்த 20-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது.  
இதில், மாணவர் முகமது இர்பான் மட்டும் பங்கேற்கவில்லை.  ஏனைய 99 பேரும் பங்கேற்றனர்.  சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத மாணவருக்கு சான்றிதழ் சரிபார்க்க வருகிற திங்கள்கிழமை நேரில் வருமாறு பதிவு தபால் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 
கல்லூரி தொடங்கிய ஒரு வாரம் மட்டும் வகுப்புக்கு வந்த மாணவர் முகமது இர்பான்,  கடந்த செப்.8-ஆம் தேதி முதல் கல்லூரிக்கு வராமல் விடுப்பில் இருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதேபோல, விடுப்பில் உள்ள இந்த மாணவரின் ஆவணங்கள் மற்றும் விவரங்களை வெள்ளிக்கிழமை (செப்.27) விசாரணைக் குழுவினர் பெற்றுச் சென்றுள்ளனர் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com