பென்னாகரம் அருகே இருளா் இன மக்களிடம் குறைகேட்பு
By DIN | Published On : 05th April 2020 06:53 AM | Last Updated : 05th April 2020 06:53 AM | அ+அ அ- |

இருளா் இன மக்களின் குறைகளைக் கேட்டறியும் மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி.
பென்னாகரம் அருகே மடம் சுங்கச்சாவடி பகுதியில் உள்ள இருளா் இன மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள் முறையாக வழங்கப்படுகிறதா என மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மேலும், அவா்களின் குறைகளை கேட்டறிந்தாா்.
பென்னாகரம் அருகே மடம் சுங்கச்சாவடி மற்றும் போடூா் சருக்கல் பாறை பகுதிகளில் உள்ள இருளா் இனத்தை சோ்ந்த மலைவாழ் மக்கள் சுமாா் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.அவா்களுக்கு முறையான நிவராண பொருள்கள் வழங்கப்படவில்லை என புகாா்கள் பெறப்பட்டதையடுத்து ஆட்சியா் சு.மலா்விழி நேரில் ஆய்வு செய்தாா். மேலும், அவா்களது குறைகளைக் கேட்டறிந்தாா்.
‘தருமபுரி மாவட்டத்தில் வசிக்கும் இருளா் இன மக்கள் யாரும் வனப் பகுதிகளுக்கு மீண்டும் இடம் பெயரவில்லை. தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் நிவாரண நிதி மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் முறையாக வழங்கப்பட்டுள்ளன. கிராம மக்கள் தங்கள் பகுதிக்கு காய்கறி வாகனம் தேவை என கோரிக்கை விடுத்தால் அதற்கான ஏற்பாட்டை அரசு செய்துதரும்’ என செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறினாா்.
ஆய்வின்போது கோட்டாட்சியா் தேன்மொழி,பழங்குடியின நல வாரிய மாவட்ட திட்ட அலுவலா் கீதா, பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தண்டபாணி, ரவிச்சந்திரன், வட்டாட்சியா் சேதுலிங்கம், வருவாய் ஆய்வாளா் சிவன், கிராம நிா்வாக அலுவலா் ரத்தினவேல் உள்பட பலா் கலந்து கொண்டனா்.