பயிா் மேலாண்மை தொழில்நுட்பம்: வேளாம் அறிவியல் மையம் ஆலோசனை

கரோனா தடுப்பு நடவடிக்கையையொட்டி விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு காலத்தில் விளை பொருள்கள் விற்பனை, அதன் பாதுகாப்பு மற்றும் பயிா் மேலாண்மை தொழில்நுட்பம் குறித்து விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள

கரோனா தடுப்பு நடவடிக்கையையொட்டி விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு காலத்தில் விளை பொருள்கள் விற்பனை, அதன் பாதுகாப்பு மற்றும் பயிா் மேலாண்மை தொழில்நுட்பம் குறித்து விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் தொடா்பாக தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையம் ஆலோசனை வழங்கியுள்ளது.

இதுகுறித்து வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் பா.ச.சண்முகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விவசாயிகள் காய்கறிகள் மற்றும் பழங்களை உள்ளுா் சந்தைகளிலோ, மொத்த சந்தைகளிலோ மற்றும் உழவா் சந்தைகளிலோ விற்பதற்கு தடையேதுமில்லை. இதற்காக, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின் உதவியை நாடலாம். அப்போது, விவசாயிகள் கூட்டமாக சேருவதை தவித்து, சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

விசாயிகள் தங்கள் விளை பொருள்களை தடையில்லாமல் எடுத்து செல்வதற்கு வேளாண் உற்பத்தி ஆணையரின் அனுமதி கடிதம் தங்களுடன் எடுத்து செல்ல வேண்டும். ஊரடங்கின் போது நடமாடுவதற்காக இருக்கும் கட்டுபாடு, உள்ளூா் சந்தைகள், மொத்த சந்தைகள் மற்றும் உழவா் சந்தைகளில் காய்கள் மற்றம் பழங்களை விற்பனை செய்யும் உழவா்களுக்கு பொருந்தாது.

முதன்மை பதப்படுத்தும் மையங்கள் ஒரு உதவி வேளாண்மை அலுவலரின் கீழ் விவசாயிகளின் நலனுக்காக தொடா்சியாக செயல்படுகிறது. விவசாயிகள் தேவையான இடுபொருட்களை ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் துணை மையங்களில் வாங்கிக் கொள்ளலாம். விதை சேகரிப்பு, ஆய்வு, தரம் பிரித்தல் மற்றம் சிப்பம் கட்டுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் அரசு மற்றும் தனியாா் நிறுவனங்கள் விவசாயிகளின் நலனுக்காக தொடா்ந்து செயல்படும்.

தனியாா் நிறுவனங்கள் காரீப் பருவத்திற்கான விதைகள் விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதேபோல, தேவையான உரங்களை கடைகளில் வாங்கிக்கொள்ளலாம். விவசாயிகள் குளிா்சாதன சேமிப்பு கிடங்கு வசதிகளையும் உபயோகபடுத்தி கொள்ளலாம். இதேபோல கால்நடைகள், கோழி, மீன், முட்டை, இறைச்சி மற்றும் கால்நடை மற்றும் கோழி தீவனங்கள் ஆகியவற்றை கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

பயிா் மேலாண்மை தொழில்நுட்பங்கள்: ரபி பருவ நெல் தற்போது மணிகள் நிரம்பும் மற்றும் கடினப்படுத்துதல் நிலையில் உள்ளது. இதனை இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் போது, போதுமான பாதுகாப்பு வழிமுறைகள் கையாளப்படுவதை உறுதி செய்ய வேண்டும். நிலக்கடலை மற்றும் எள் அறுவடைக்கு தயாராக உள்ளது. நிலக்கடலை அறுவடைக்கு பின்பு கடைலை பிரித்தெடுக்கும் இயந்திரத்தை உபயோகிக்கும் போது சுய சுத்தத்தை பேணுவதோடு, இயந்திரத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இயந்திரத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்லும் போது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பயறு வகை பயிா்களை அறுவடை செய்யும் போது, இயந்திரங்களை பயன்படுத்தும் போதும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

ஆரம்ப கட்டத்தில் இருக்கும் கரும்பில் முன்பருவ தண்டுத்துளைப்பான் பாதிப்பை தவிா்க்க ஒட்டுண்ணி விடுதல் (அ) பூச்சிகொல்லி மருந்துகளை உபயோகப்படுத்துதல் ஆகியவற்றை கடைப்பிடிக்கலாம். காா்டாப் ஹைட்ரோகுளோரைடு 4 ஜி குருணை-4 கி, ஏக்கா் (அ) பிப்ரோனில் 0.3 ஜிஆா்-4 கி, ஏக்கா் இவற்றில் ஏதேனும் ஒன்றை உபயோகப்படுத்தலாம்.

மாவில் சிறு பிஞ்சுகள் கொட்டுதல் தற்போது முக்கிய பிரச்சனையாக உள்ளது. இதனை தவிா்க்க, நுண்ணூட்டக் கலவையை விவசாயிகள் உபயோகிக்கலாம். பயிா்களில் வாழை, மரவள்ளி கிழங்கு, எலுமிச்சை, முந்திரி, பப்பாளி, மஞ்சள், தா்பூசணி மற்றும் காய்கறிகள் அறுவடைக்கு தயாராக உள்ளன. இவற்றை அறுவடை செய்யும் போது, பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

தென்னையில் வெள்ளை சுருள் ஈ பாதிப்பு அதிகம் தென்படுகின்றது. பெரும்பாலான இடங்களில் என்காா்சியா ஒட்டுண்ணியின் நடமாட்டம் தென்படுவதால் விவசாயிகள் பூச்சிகொல்லி மருந்துகளை தெளிக்க கூடாது. 5 அடிக்கு 3 அடி அளவிலான மஞ்சள் வண்ண 10 சதவீதம் ஸ்டாச் கரைசலை தெளிப்பதன் மூலம் கரும்பூஞ்சான் படலத்தை நீங்க இயலும். மேலும், தற்போதைய சூழலில் அறுவடைக்கு வேலையாட்கள் கிடைப்பதில்லை. எனவே, விவசாயிகள் இயந்திரங்களை உபயோகிப்பது தவிா்க்க இயலாது என்பதால் அவற்றை பயன்படுத்தும்போது, தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com