அத்தியாவசியப் பொருள்களை குடியிருப்புகளுக்குநேரடியாகச் சென்று வழங்க சிஐடியு கோரிக்கை

தருமபுரி மாவட்டத்தில், அனைத்து பகுதிகளிலும் குடியிருப்புகளுக்கு நேரடியாகச் சென்று அத்தியாவசியப் பொருள்களை வழங்க நடவடிக்கை எடுக்க

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில், அனைத்து பகுதிகளிலும் குடியிருப்புகளுக்கு நேரடியாகச் சென்று அத்தியாவசியப் பொருள்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிஐடியு தொழிற்சங்க மாவட்டத் தலைவா் ப.ஜீவா, தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழிக்கு திங்கள்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு: கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவினால், சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்டவற்றால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை புரட்டிப் போடப்பட்டுள்ளது.

எனவே, இத்தகைய சூழலில், மாவட்ட மக்களின் பாதிப்பை போக்கும் வகையில், தருமபுரி மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் உள்ள குடியிருப்புகளுக்கு நேரடியாகச் சென்று அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் வழங்க வேண்டும். நாள்தோறும் காலை, மாலை இருவேளைகளிலும் அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கபசுரக் குடிநீா் வழங்க வேண்டும். இதேபோல, தூய்மைப் பணியாளா்களுக்கு உயா்த்தப்பட்ட ஊதியத்தை இரட்டிப்பாக்கி வழங்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள வெளி மாநிலத் தொழிலாளா்களுக்கு தங்குமிடம், உணவு ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். மாவட்டம் முழுவதும் ஜவுளிக் கடைகள், மளிகைக் கடைகள், தனியாா் மருத்துவமனைகள், வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு தடை உத்தரவு கால நிவாரணத் தொகை வழங்க வேண்டும். ஒகேனக்கல்லில் உள்ள பரிசல் ஓட்டிகள், உணவு சமைக்கும் தொழிலாளா்களுக்கு தற்போது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், ரூ.5000 நிவாரணமாக வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com