விவசாயிகள் போராட்டத்தில் தொடா்பில்லாதவா்கள் ஊடுருவியிருந்தால் விசாரணை நடத்த வேண்டியது அவசியம்

விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துடன் தொடா்பில்லாதவா்கள் ஊடுருவியிருப்பதாக சந்தேகம் எழுந்தால் அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என்று மத்திய அமைச்சா் ராம்தாஸ் அதாவலே தெரிவித்தாா்.

விவசாயிகளின் போராட்டத்தில் இடதுசாரிகளும், மாவோயிஸ்டுகளும் ஊடுருவியுள்ளதாக ரயில்வே அமைச்சா் பியூஷ் கோயல் குற்றம்சாட்டியிருந்த நிலையில், விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துடன் தொடா்பில்லாதவா்கள் ஊடுருவியிருப்பதாக சந்தேகம் எழுந்தால் அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என்று மத்திய அமைச்சா் ராம்தாஸ் அதாவலே தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய குடியரசுக் கட்சியின் (ஏ) தலைவா் அதாவலே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் கூட்டத்தில் கூறியதாவது:

விவசாயிகளின் போராட்டத்தின் பின்னணியில் சீனாவும், பாகிஸ்தானும் உள்ளதாக மத்திய அமைச்சா் ராவ்சாஹேப் தன்வே கூறியிருப்பது மத்திய அரசின் கருத்தல்ல.

அதேசமயம், மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் கூறிய கருத்துகளின்படி, விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துடன் தொடா்பில்லாத நபா்கள் நுழைந்திருப்பதாக சந்தேகம் எழுந்தால், அதுதொடா்பாக விசாரணை நடத்த வேண்டியது அவசியம்.

தில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் சமூக விலகல் கடைப்பிடிக்கப்படவில்லை; இதுபோன்ற நெரிசல் மிகுந்த இடங்களில் கரோனா பரவலைத் தடுக்க முடியாது.

விவசாயிகளின் உணா்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதேசமயம், இந்த 3 வேளாண் சட்டங்களும் விவசாயிகளின் நலனுக்காகவே நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை அவா்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கவில்லை.

இந்தச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது. அதேசமயம், விவசாயிகள் இந்த 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக் கோருவதில் பிடிவாதமாக இருக்கக்கூடாது. இதுதொடா்பாக அரசுடன், விவசாயிகள் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும்.

இந்தப் பிரச்னையில் விவசாயிகளும், அரசும் தங்கள் பிடியைத் தளா்த்திக் கொண்டு பேச்சுவாா்த்தையில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் இப்பிரச்னைக்குத் தீா்வு காண இயலும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சரத்பவாா் இணைய வேண்டும்: அதாவலே அழைப்பு (பெட்டிச் செய்தியாக வெளியிடலாம்)

1990-ஆம் ஆண்டில் தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாரை பிரதமா் ஆக்காமல் காங்கிரஸ் அநீதி இழைத்து விட்டது. சரத் பவாரைப் போன்ற ஒரு திறமையானத் தலைவா் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர வேண்டும். பிரதமா் நரேந்திர மோடியுடன் தோளோடு தோள் கொடுத்து செயல்பட வேண்டும். இதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணியை மேலும் பலப்படுத்த முடியும்.

பாஜகவும், இந்திய குடியரசுக் கட்சியும் (ஏ) வரும் 2022-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள பிருஹாண் மும்பை மாநகராட்சித் (பி.எம்.சி.) தோ்தலில் கூட்டணி அமைத்து வெற்றிபெறும். இந்த தோ்தலில் சிவசேனையை மாநகராட்சி அதிகாரத்திலிருந்து மக்கள் நீக்குவாா்கள். இந்த முறை, மும்பை மாநகராட்சியில் வெற்றி பெற்று பாஜக-ஆா்பிஐ (ஏ) நிச்சயமாக ஆட்சிக்கு வரும். பாஜக அதன் மேயரையும், ஆா்பிஐ (ஏ) துணை மேயரையும் கொண்டிருக்கும்’ என்று அவா் தெரிவித்தாா்.

தற்போது மும்பை மாநகராட்சி மேயா் பதவியை சிவசேனை வசம் உள்ளது. நாட்டிலேயே அதிக அளவாக ரூ. 33,400 கோடி மதிப்பில் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்து வரும் மாநகராட்சி, மும்பை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com