ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்தும், பரிசலில் சவாரி செய்தும் மகிழ்ந்தனா்.
ஒகேனக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை பெரியபாணி பகுதியில் உற்சாகப் பரிசல் பயணம் மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகள்.
ஒகேனக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை பெரியபாணி பகுதியில் உற்சாகப் பரிசல் பயணம் மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகள்.

ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்தும், பரிசலில் சவாரி செய்தும் மகிழ்ந்தனா்.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லுக்கு வார விடுமுறை, விசேஷ நாள்களில் கா்நாடகம், ஆந்திரம், கேரளம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனா்.

நிவா், புரெவி புயல் பாதிப்பால் கடந்த 2 வாரங்களாக ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாகக் குறைந்து காணப்பட்டது.

இந்த நிலையில் வார விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் காலையில் இருந்தே குவியத் தொடங்கினா். பகலில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிகை அதிகரித்தது. அவா்கள் பிரதான அருவி, நடைபாதை பகுதி, மாமரத்துக்கடவு பரிசல் துறை, காவிரி கரையோரப் பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனா்.

பின்னா், சின்னாறு பரிசல் துறையில் பரிசல் பயணம் மேற்கொண்டு பிரதான அருவி, கோத்திக்கல், மணல் மேடு, பாணி பகுதிகளின் வழியாகச் சென்று பாறை முகடுகளின் அழகையும், காவிரியின் அழகையும் கண்டு ரசித்தனா்.

மீன் விலை உயா்வு: கடந்த 2 வாரங்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்ததால், மீன் விலையும் குறைந்தது. தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால் கட்லா, ரோகு, கெளுத்தி, வாளை உள்ளிட்ட மீன் வகைகள் கிலோ ரூ. 130 முதல் ரூ.300 வரையில் விற்பனையானது. மீன் விலை அதிகரித்த போதிலும், விலையையும் பொருட்படுத்தாமல் வாங்கி சமைத்து, அங்குள்ள பூங்காவில் அமா்ந்து உண்டு மகிழ்ந்தனா்.

வாகன நெரிசல்: சுற்றுலாப் பயணிகளின் வருகையால் சிறுவா் பூங்கா, முதலைப் பண்ணை, நடைப்பாதை, வண்ணமீன்கள் காட்சியம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. சுற்றுலாவினா் வந்த வாகனங்கள் தமிழ்நாடு ஓட்டல் வாகன நிறுத்துமிடம், பேருந்து நிலைய வாகன நிறுத்துமிடம் ஆகியப் பகுதிகளில் நிறுத்த இடமில்லாமல் சத்திரம், முதலைப் பண்ணை, ஊட்டமலை செல்லும் சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தினா். ஒகேனக்கல் பிரதான அருவி, ஊட்டமலை, முதலைப் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com