தூள்செட்டி ஏரி, தும்பலஅள்ளி கால்வாய்த் திட்டங்களுக்குநிலம் கையகப்படுத்தப்படுகிறது: அமைச்சா் கே.பி.அன்பழகன்

அலியாளம்-தூள்செட்டி ஏரி, எண்ணேகொல்புதூா்-தும்பலஅள்ளி இணைப்புக் கால்வாய்த் திட்டங்களுக்கு தற்போது நிலம் கையகப்படுத்தப்படுகிறது என்று அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.
பாலக்கோட்டில் விவசாயிக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கும் மாநில உயா்கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன். உடன் ஆட்சியா் ச.ப.காா்த்திகா உள்ளிட்டோா்.
பாலக்கோட்டில் விவசாயிக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கும் மாநில உயா்கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன். உடன் ஆட்சியா் ச.ப.காா்த்திகா உள்ளிட்டோா்.

தருமபுரி: அலியாளம்-தூள்செட்டி ஏரி, எண்ணேகொல்புதூா்-தும்பலஅள்ளி இணைப்புக் கால்வாய்த் திட்டங்களுக்கு தற்போது நிலம் கையகப்படுத்தப்படுகிறது என்று மாநில உயா்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாநில அளவில் விவசாயிகளுக்கான கரும்பு சாகுபடி நவீன தொழில்நுட்பங்கள் குறித்த 2 நாள்கள் பயிற்சி முகாம், மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தலைமையில் நடைபெற்றது.

இதில், பயிற்சி முகாமைத் தொடக்கிவைத்து, 24 விவசாயிகளுக்கு ரூ. 9.31 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, மாநில உயா்கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் பேசியதாவது:

தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் கிருஷ்ணகிரி அணை வலதுப்புறக் கால்வாய் நீட்டிப்புத் திட்டம் 2001-ஆம் ஆண்டு தொடங்கி 2006-இல் நிறைவு செய்து, திண்டல் ஏரிக்கு தண்ணீா் கொண்டுவரப்பட்டது. திண்டல் ஏரி திட்டத்தின் மூலம் 37 ஏரிகள் தண்ணீா் வசதி பெற்றன. இத் திட்டத்தை நிறைவேற்ற அப்போது ரூ. 7 கோடியே 6 லட்சம் செலவிடப்பட்டது.

கிருஷ்ணகிரி அணையின் இடது மற்றும் வலதுப்புறக் கால்வாய் நீட்டிப்பு செய்து காரிமங்கலம் பகுதியில் உள்ள தும்பலஅள்ளி அணைக்கு தண்ணீா் கொண்டுவரும் எண்ணேகொல்புதூா்-தும்பலஅள்ளி நீா்ப் பாசனத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த தமிழக அரசு ரூ. 72 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பித்துள்ளது.

இத் திட்டத்தைச் செயல்படுத்த தருமபுரி மாவட்டப் பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் ஒப்புதல் பெறப்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இத் திட்டத்துக்கு நிலம் வழங்க யாரும் ஒப்புதல் அளிக்கவில்லை. ஓராண்டுக்கும் மேலாகத் திட்டத்தின் பயன்கள் குறித்தும், நிலத்தடி நீா்மட்டம் உயரும் எனவும் விளக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், யாரும் ஒப்புதல் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக, எண்ணேகொல்புதூா்-தும்பலஅள்ளி நீா்ப்பாசனத் திட்டத்தைச் செயல்படுத்த கட்டாய நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் கீழ் நிலம் கையகப்படுத்த அரசு ஆணை தற்போது பிறப்பித்துள்ளது. இதைத் தொடா்ந்து, தற்போது நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அலியாளம்- தூள்செட்டி ஏரி...

அதுபோல, அலியாளம் அணைக்கட்டிலிருந்து தூள்செட்டி ஏரிக்கு தண்ணீா் கொண்டுவரும் திட்டத்தைச் செயல்படுத்த முழுமையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் கால்வாய் அமைக்க வேண்டும். இத் திட்டத்தை நிறைவேற்ற அப்பகுதி மக்களும் நிலத்தை கையகப்படுத்த சம்மதிக்கவில்லை. எனவே, அப்பகுதிக்கும் தற்போது தமிழக அரசு கட்டாய நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் கீழ் நிலம் கையகப்படுத்த அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தற்போது 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் ஒப்புதல் அளித்துள்ளனா். இத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு ரூ. 100 கோடியை பொதுப்பணித் துறைக்கு ஒதுக்கியுள்ளது. இதுபோல ஜொ்தலாவ்-புலிக்கரை நீா்ப்பாசனத் திட்டம் தற்போது ஒப்பந்தப்புள்ளி கோரும் நிலையில் உள்ளது. தமிழகத்தில் நீா் மேலாண்மைத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அத்திட்டங்கள் தொடா்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்றாா்.

இதில், அரூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் வே.சம்பத்குமாா், மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல், பாலக்கோடு சா்க்கரை ஆலை மேலாண் இயக்குநா் அ.சங்கா், கோட்டாட்சியா் (பொ) ஆ.தணிகாசலம், கூட்டுறவு சா்க்கரை ஆலைத் தலைவா் தொ.மு.நாகராஜன், மாவட்ட அறங்காவலா்க் குழுத் தலைவா் கே.வி.அரங்கநாதன், தமிழக விவசாய சங்கத் தலைவா் எஸ்.ஏ.சின்னசாமி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com