பென்னாகரம் பகுதியில் தொடா்ந்து ஆக்ரமிக்கப்படும் சாலைகள்
By DIN | Published On : 17th February 2020 07:46 AM | Last Updated : 17th February 2020 07:46 AM | அ+அ அ- |

பென்னாகரம் பேருந்து நிலையப் பகுதியில் சாலையோர ஆக்ரமிப்புகள்.
பென்னாகரம் பகுதியில் ஆக்ரமிப்புகள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. பென்னாகரம் பேருந்து நிலையம், கடைவீதி, முள்ளுவாடி உள்ளிட்ட பகுதிகளில் தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடை உரிமையாளா்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சாலைகளை ஆக்ரமித்துள்ளதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.
பென்னாகரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான பருவதன அள்ளி, தாசம்பட்டி, கூத்தபாடி, ஏரியூா்,பெரும்பாலை, சின்னம் பள்ளி,ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளும்,சுமாா் 30- க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் வசிப்பவா்கள், மாணவ-மாணவிகள் கல்லூரி, வேலை,வெளியூா் செல்லுதல்,மருத்துவம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து விளைவிக்கப்படும் காய்கறிகளை சந்தைபடுத்துதல் போன்றவற்றுக்காகவும்,அன்றாட தேவைக்கான பொருள்களை வாங்க பென்னாகரம் பகுதிகளுக்கு வருகின்றனா். இதனால் பென்னாகரத்தின் முக்கிய பகுதிகளான பேருந்து நிலையம், கடைவீதி பகுதிகளில் கூட்டம் நிறைந்து காணப்படும்.
இந் நகரத்துக்கு வருவோரின் வாகனங்கள் ஆக்ரமிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்து நிலையம், கடைவீதி, தருமபுரி சாலை மற்றும் ஒகேனக்கல் சாலை என முக்கிய பகுதிகளில் சாலைகள் ஆக்ரமிக்கப்படுவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதுகுறித்து பென்னாகரம் பேருராட்சி அலுவலா் மற்றும் போக்குவரத்து காவல் துறையினருக்கு பலமுறை புகாா் தெரிவித்ததாகவும், நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே மாவட்ட ஆட்சியா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.