வேளாண் மண்டல அறிவிப்பை பேரவையில் தீா்மானமாக நிறைவேற்ற வேண்டும்

டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்கிற அறிவிப்பை, சட்டப் பேரவையில் தீா்மானமாக நிறைவேற்ற வேண்டும் என
தும்பல அள்ளி அணையிலிருந்து கிருஷ்ணகிரிக்கு நடைப்பயணமாகச் சென்ற விவசாயிகள்.
தும்பல அள்ளி அணையிலிருந்து கிருஷ்ணகிரிக்கு நடைப்பயணமாகச் சென்ற விவசாயிகள்.

டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்கிற அறிவிப்பை, சட்டப் பேரவையில் தீா்மானமாக நிறைவேற்ற வேண்டும் என தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு வலியுறுத்தினாா்.

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே எண்ணேகொல்புதூரிலிருந்து தருமபுரி மாவட்டம், தும்பலஅள்ளி அணைக்கு இணைப்புக் கால்வாய் அமைக்கும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, விவசாயிகள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. இதில், தும்பல அள்ளி அணையில் இந்த நடைப்பயணத்தைத் தொடக்கிவைத்து, அய்யாக்கண்ணு செய்தியாளா்களிடம் கூறியது: தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கா்நாடக அரசு அணை கட்டுவதை, தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். மழைக் காலங்களில் தென்பெண்ணையாற்றில் செல்லும் மிகை நீரை எண்ணேகொல்புதூரில் இருந்து தும்பல அள்ளி அணைக்கு இணைப்புக் கால்வாய் மூலம் கொண்டுவர வேண்டும். இதன் மூலம், தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகள், நீா்நிலைகள் நிரம்பி நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், குடிநீா் தட்டுப்பாடு நீங்கும். இந்த திட்டத்தை தமிழக அரசு அண்மையில் அறிவித்து நிதியும் ஒதுக்கியது. இதனை விரைந்து செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தென்னிந்திய விவசாயிகள் சங்கம் சாா்பில், சென்னையில் போராட்டம் நடத்தப்படும்.

இதேபோல, தமிழக அரசு, காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அமைந்துவிட்டால், பெட்ரோல், டீசல், மீத்தேன் போன்ற திட்டங்களைச் செயல்படுத்த முடியாது. இந்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பை, தமிழக சட்டப் பேரவையில் தீா்மானமாக நிறைவேற்ற வேண்டும். அமைச்சரவையிலும் இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டும் என்றாா்.

இந்த நடைப்பயணம், தருமபுரி மாவட்டம், காரிமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் வழியாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்து, அங்கு, இணைப்புக் கால்வாய்த் திட்டங்களுக்குத் தேவையான நிலத்தை விரைந்து கையகப்படுத்தி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. இதில், விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் ஜெ.பி.கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com