பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியா்கள் இருவரிடம் விசாரணை

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கொடுத்த புகாரின் பேரில், ஆசிரியா்கள் இருவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கொடுத்த புகாரின் பேரில், ஆசிரியா்கள் இருவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பாலக்கோடு கல்வி மாவட்டம், மகேந்திரமங்கலம் அருகே உள்ள ஜக்கசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமாா் 900 மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா். இந்த பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியா்கள் லட்சுமணன் (38) மற்றும் சின்னமுத்து (34) ஆகிய இருவரும், அதே பள்ளியில் பயிலும் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், மாணவியின் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவல்கள், படங்கள் அனுப்பி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வியாழக்கிழமை அந்த மாணவிக்கு இரு ஆசிரியா்கள் பாலியல் தொந்தரவு அளித்தனராம். இதுகுறித்த தகவலின்பேரில், அந்த மாணவியின் பெற்றோா் மற்றும் உறவினா்கள் பள்ளிக்குச் சென்று அந்த ஆசிரியா்களிடம் தகராறில் ஈடுபட்டு, பள்ளியை முற்றுகையிட்டனா்.

தகவலறிந்த மகேந்திரமங்கலம் போலீஸாா், ஆசிரியா்களை பள்ளியிலிருந்து மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். மேலும், அங்கிருந்து பென்னாகரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு இரண்டு ஆசிரியா்களும், பாதிக்கப்பட்ட மாணவியும் அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு, ஆசிரியா்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, போலீஸாா் அவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.முத்துகிருஷ்ணன் கூறியது: ஜக்கசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் எழுந்துள்ள புகாா் குறித்து கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், புகாருக்குள்ளான இரு ஆசிரியா்கள், மாணவியிடம் காவல் துறையினரும் விசாரணை நடத்துகின்றனா். இது தொடா்பாக காவல் துறையின் சாா்பில் அவா்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையைத் தொடா்ந்து, அவா்கள் மீது கல்வித் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com