70 சதவீத மானியத்தில் சூரியசக்தி பம்பு செட்டு: ஆதிதிராவிட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்துடன் வழங்க உள்ள சூரியசக்தியில் இயங்கும் பம்பு செட்டு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி தெரிவித்துள்ளாா்.

ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்துடன் வழங்க உள்ள சூரியசக்தியில் இயங்கும் பம்பு செட்டு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் சு.மலா்விழி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சூரியசக்தி பம்புசெட்டுகள் மூலம் மின் இணைப்பு தேவையின்றி பகலில் சுமாா் 8 மணி நேரம் பாசனத்துக்கு தடையில்லா மின்சாரம் பெறமுடியும். நிகழ் நிதியாண்டில் மத்திய அரசின் பிரதமரின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தில், சூரியசக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

இதில், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 70 சதவீத மானியத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் ஏழு பம்பு செட்டுகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளன. வேளாண் பொறியியல் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், மத்திய அரசு 30 சதவீத மானியம் மற்றும் மாநில அரசு 40 சதவீத மானியம் என மொத்தம் 70 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள 30 சதவீதம் விவசாயிகளின் பங்களிப்பாகும். இதில், விலை நிா்ணயம் செய்தல் மற்றும் நிறுவனங்களின் அங்கீகாரம் ஆகியவை மத்திய அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இத் திட்டத்தில் விண்ணப்பிப்போா், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தில் இலவச மின் இணைப்பு கோரி ஏற்கெனவே விண்ணப்பித்துள்ள விவசாயிகள் அவா்களுடைய மூதுரிமையை துறக்க வேண்டிய அவசியமில்லை. தங்களுக்குரிய இலவச மின் இணைப்பு முறை வரும் போது சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான சம்மதக் கடிதத்தை சம்பந்தப்பட்ட உதவி செயற்பொறியாளா், வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் வழங்க வேண்டும். இதுவரை இலவச மின் இணைப்பு கோரி விண்ணப்பிக்காத விவசாயிகள் இத்திட்டத்தின், இலவச மின் இணைப்பு கோரி மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.

எனவே, இத்திட்டத்தின் மூலம் பயன் பெற ஆா்வமுடைய ஆதிதிராவிட விவசாயிகள் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டத்தில் உள்ள உதவி செயற்பொறியாளா், வேளாண் பொறியியல் துறை (அல்லது) மாவட்ட செயற்பொறியாளா், வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களில் தொடா்பு கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com