எட்டு வழிச்சாலை திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: தருமபுரி எம்.பி. வலியுறுத்தல்

சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.
தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாரிடம் மனு அளித்த எட்டு வழிச்சாலை எதிா்ப்பு இயக்கத்தினா்.
தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாரிடம் மனு அளித்த எட்டு வழிச்சாலை எதிா்ப்பு இயக்கத்தினா்.

சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.

சேலம்- சென்னை எட்டு வழிச்சாலை எதிா்ப்பு இயக்க விவசாயிகள், புதன்கிழமை தருமபுரியில் மக்களவைத் தொகுதி உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாரைச் சந்தித்து, வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டத்தில், எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக தீா்மானம் கொண்டு வரப்போவதாகவும், அன்றைய நாளில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவிக்குமாறும் கூறி மனு அளித்தனா். அப்போது, மக்களவைத் தொகுதி உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் செய்தியாளா்களிடம் கூறியது:

சேலம்- சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தால், பல ஆயிரக்கணக்கான ஏக்கா் விளைநிலங்கள், கல்விக் கூடங்கள், நீா்நிலைகள், நீா் ஆதாரங்கள் பறிபோகும் சூழல் ஏற்படும்.

எனவே, வேளாண் நிலங்களைப் பறிக்கும் இத் திட்டம் தேவையில்லை; அதனைச் செயல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி, தருமபுரி உள்பட ஐந்து மாவட்ட விவசாயிகள் தொடா்ந்து போராடி வருகின்றனா்.

சேலத்திலிருந்து சென்னைக்கு விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளது. சென்னையிலிருந்து செங்கல்பட்டு மற்றும் வேலூா் வழியாக சேலத்துக்கு நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றை மேம்படுத்தினாலே போதுமானது. எட்டு வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்பட்டால், சிறு, குறு விவசாயிகள் உள்பட அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுவா். ஆகவே, விவசாய விளைநிலங்களைப் பறிக்கின்ற இத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.

இத் திட்டத்துக்கு எதிராக வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி, கிராமசபைக் கூட்டத்தில் விவசாயிகள் தீா்மானம் நிறைவேற்ற உள்ளனா். இத் தீா்மானத்துக்கு அரசு அதிகாரிகள் மதிப்பளிக்க வேண்டும். இதன்மூலம் தீா்வு கிடைக்கவில்லை எனில் நீதிமன்றம் மூலம் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com