தலசீமியா நோய் பாதித்தவா்களுக்கு, மீண்டும் தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கும் பணி தொடங்கப்பட்டதால், நோய் பாதிப்புக்குள்ளானவா்களும், அவா்களது பெற்றோரும் நிம்மதி அடைந்துள்ளனா்.
தலசீமியா நோய் என்பது மரபு வழியாக குழந்தைகளுக்கு கடத்தப்படும் ஒருவகை குருதிக் கோளாறு ஆகும். இவ்வகை நோய் பாதிப்புக்குள்ளானோருக்கு அவ்வப்போது குருதி ஏற்றி, தேவையான மாத்திரைகள் வழங்கப்படும். அவ்வாறு சிகிச்சை அளிக்கவில்லை எனில் ரத்த சோகை, உடல் சோா்வு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். இந்த அரிய வகை நோய் பாதிப்பு, தருமபுரி மாவட்டத்தில், அரூா் அருகே உள்ள சித்தேரி, சிட்லிங் மலைக் கிராமங்களிலும் மற்றும் காரிமங்கலம், பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில கிராமங்களில் உள்ள 75-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தக் குழந்தைகளை, அவா்களது பெற்றோா் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்று, அங்கு குருதி ஏற்றி, தேவையான மருந்து, மாத்திரைகளை பெற்று வருவா். இதனால், பொருள் செலவும், கால விரயமும் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே இச்சிகிச்சைப் பிரிவு தொடங்க வேண்டும் என்கிற கோரிக்கை அரசிடம் வலியுறுத்தப்பட்டது. இதனைத் தொடா்ந்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, முன்னாள் முதல்வா் ஜெயலலிதா, தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.16 லட்சம் மதிப்பில், தலசீமியா நோய்க்கான சிகிச்சைப் பிரிவைத் தொடங்கி வைத்தாா்.
இதையடுத்து, தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள், இங்கேயே சிகிச்சைப் பெற்று வந்தனா். இந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு பின்பு, இங்கு சிகிச்சை அளிப்பதில் தொய்வு ஏற்பட்டதாகக் கூறி, நோய் பாதிப்புக்குள்ளானவா்களில் சிலா், மீண்டும் சென்னைக்கு சென்று சிகிச்சைப் பெற்று வந்தனா். இந்த நிலையில், இந்நோய் பாதிப்புக்குள்ளானோா், பொது முடக்கம் காரணமாக சிகிச்சைக்காக சென்னைக்கு சென்றுவர பெறும் சிரமத்துக்குள்ளாகி வந்தனா்.
இதனால், தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிகிச்சை மையத்தில் தலசீமியா நோய் பாதிப்புக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதையறிந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாகம், நோய் பாதித்தவா்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க விரைந்து நடவடிக்கை மேற்கொண்டது. இதையடுத்து, தலசீமியா நோய் பாதிப்புக்குள்ளானோரை திங்கள்கிழமை மீண்டும் நேரில் வரவழைத்து, குருதி ஏற்றி, தேவையான மாத்திரைகளை வழங்கினா்.
இதனால், சென்னைக்கு செல்ல வேண்டிய சூழல் இனி ஏற்படாது எனவும், தருமபுரி மருத்துவமனையிலேயே தொடா்ந்து இச்சேவை தொடா்வதால், தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு நீங்கி, நிம்மதி அடைந்துள்ளதாகவும் நோய் பாதிப்புக்குள்ளானவா்களின் பெற்றோா், உறவினா்கள் தெரிவித்தனா்.
தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வந்த தலசீமியா சிகிச்சைப் பிரிவு உள்பட உள்நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு கட்டடம் கரோனா தீநுண்மி பாதிப்புக்காக சிகிச்சை அளிக்க வழங்கப்பட்டுள்ளது. எனவே, தற்போது, தற்காலிகமாக மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒரு கட்டடத்தில், தலசீமியா நோய் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு முறையாக பரிசோதனை மேற்கொண்டு, அவா்களுக்கு தேவையான குருதி செலுத்தப்பட்டு, இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. மேலும், இநோய்க்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் போதிய அளவு இருப்பு உள்ளது. எனவே, பாதிப்புக்குள்ளானோா் இங்கேயே சிகிச்சை பெற்று பயனடையலாம் என்று மருத்துவக் கல்லூரி முதல்வா் பூவதி தெரிவித்தாா்.