கா்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீா் தமிழகம் வந்தடையவில்லை!

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரானது, இரண்டு நாள்களுக்கு மேலாகியும் தமிழகம் வந்தடையவில்லை.
பிலிகுண்டுலுவில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீா் அளவிடும் பகுதி.
பிலிகுண்டுலுவில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீா் அளவிடும் பகுதி.

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரானது, இரண்டு நாள்களுக்கு மேலாகியும் தமிழகம் வந்தடையவில்லை. இந்த நிலையில் தமிழக- கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்தானது நொடிக்கு ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின் பேரில், தமிழகத்துக்கு மாதந்தோறும் கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு ஜூன் மாதத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரானது, கடந்த 8-ஆம் தேதி கா்நாடகத்தில் உள்ள கபினி அணையில் இருந்து 1,300 கன அடியும், கிருஷ்ணராஜ சாகா் அணைகளில் இருந்து 700 கன அடி தண்ணீரும் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரானது இரண்டு நாள்களுக்கு மேலாகியும், தமிழகத்தின் நுழைவிடமான பிலிகுண்டுலுவை வந்தடையவில்லை.

கா்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீா் ஒகேனக்கல் வந்தடைந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில், காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவானது நொடிக்கு ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. மேலும், கா்நாடக அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

நீா்வரத்து குறைவு:

தமிழக- காவிரி கரையோரப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து அவ்வப்போது அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. இந்த நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவானது புதன்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 900 கன அடியாக தமிழக- கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

காவிரி கரையோரப் பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக நீா்வரத்து அதிகரித்த நிலையில், வியாழக்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 1,200 கன அடியாக அதிகரித்து காணப்பட்டது. மேலும், மாலை நிலவரப்படி காவிரி ஆற்றில் வந்து கொண்டிருந்த தண்ணீரின் அளவானது நொடிக்கு ஆயிரம் கன அடியாகக் குறைந்தது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தீவிரமாக கண்கானித்து வருகின்றனா்.

இதுகுறித்து மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீா் இன்னமும் தமிழகம் வந்தடையவில்லை. கா்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீா் வெள்ளிக்கிழமை காலை அல்லது மாலை வந்தடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com