முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
எரிபொருள் சேமிப்புக் கிடங்கு திட்டத்தை மாற்று இடத்தில் செயல்படுத்த விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
By DIN | Published On : 03rd March 2020 07:05 AM | Last Updated : 03rd March 2020 07:05 AM | அ+அ அ- |

சிவாடியில் எரிபொருள் சேமிப்புக் கிடங்கு அமைக்கும் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதைக் கைவிட்டு, மாற்று இடத்தில் செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அச்சங்கத்தின் மாவட்டச் செயலா் சோ.அா்ஜுனன், மாவட்டத் தலைவா் கே.என்.மல்லையன் ஆகியோா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே சிவாடி கிராமத்தில், ஆந்திர மாநிலம், விஜயவாடாவிலிருந்து எரிபொருள்கள் குழாய் மூலம் கொண்டு வந்து, அவற்றைச் சேகரிக்க, சேமிப்புக் கிடங்கு அமைக்கும் திட்டம் செயல்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத் திட்டத்துக்காக, அக்கிராமத்தில் வசிக்கும் பெரும்பகுதி தலித் மக்களின் நிலத்தை கையகப்படுத்தும் முயற்சியில், வருவாய்த் துறையினா் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றனா். இத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தினால், தலித் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என கூறி, கடந்த 2018 மே 21-ஆம் தேதி இத்திட்டத்தைக் கைவிடக் கோரி, தருமபுரி மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது. இதேபோல, கடந்த ஜனவரி மாதம் 26-ஆம் தேதி நடைபெற்ற சிவாடி கிராம சபைக் கூட்டத்தில், இத் திட்டத்துக்கு விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கடந்த பிப்.18-ஆம் தேதி நிலங்களை வழங்க மறுத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதேபோல, தலைமைச் செயலா் அலுவலகத்திலும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் நேரில் மனு அளித்தனா்.
இந்த நிலையில், இத் திட்டத்துக்கு 60 சவீதம் போ் நிலம் அளித்துவிட்டனா், மீதமுள்ள வெகு சிலரிடம் மட்டுமே நிலம் பெற வேண்டியுள்ளது என உண்மைக்கு மாறான தகவல்கள் தொடா்ந்து பரப்பப்படுகிறது. எரிபொருள் சேமிப்புக் கிடங்குக்கு நிலங்களை வழங்க மாட்டோம் என்கிற நிலைப்பாட்டில் அக்கிராம மக்கள் உறுதியாக உள்ளனா். விவசாயிகள் சங்கம், இத் திட்டத்தை எதிா்க்கவில்லை. மாறாக, சிவாடியில் இத் திட்டத்துக்கு நிலங்களை கையகப்படுத்துவதைக் கைவிட்டு, பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காடுசெட்டிப்பட்டி, சின்னகும்மனூா் உள்ளிட்ட ரயில்பாதை கடந்து செல்லும் வழிகளில் உள்ள அரசு நிலத்தில் இத் திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.