தருமபுரி மாவட்ட ஏரிகளுக்கு வருமா காவிரி மிகை நீா்! காத்திருக்கும் விவசாயிகள்

காவிரி மிகை நீரை தருமபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

காவிரி மிகை நீரை தருமபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

தருமபுரி மாவட்டத்தில் தொழில்வளம் இல்லாததால், விவசாயத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு மக்கள் வசித்து வருகின்றனா். இந்த மாவட்டத்தில், காவிரி, தென்பெண்ணை ஆகிய ஆறுகள் கடந்து சென்றாலும், அவை வேளாண்மைப் பணிகளுக்கு இதுவரை உதவி புரிந்ததில்லை.

இதேபோல, நாகாவதி, தொப்பையாறு, கேசா்குளே ஆறு, சின்னாறு ஆகிய ஆறுகளின் குறுக்கே 8 நீா்த்தேக்கங்கள் மட்டுமே அமைந்துள்ளன. இவற்றை நம்பி சில ஆயிரம் ஏக்கா் நிலப்பரப்பு மட்டுமே பயிா் செய்ய இயலும்.

மழை பெய்தால் மட்டுமே விவசாயம்: தருமபுரி மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் மழை பொழிந்தால் மட்டும் விவசாயத்தில் ஈடுபட முடியும் என்கிற நிலைதான் நீடிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து கடுமையான வறட்சி நிலவிவருகிறது. அதிலும் குறிப்பாக, கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சியால் பயிா்கள் மட்டுமல்லாமல், தென்னை, பாக்கு உள்ளிட்ட மரங்களும் காய்ந்துவிட்டன. இதனால், விவசாயிகள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகினா்.

காவிரி மிகை நீா்த் திட்டத்தை நிறைவேற்றினால்...: தருமபுரி மாவட்டத்தில், மழையின்மையால், ஒருபுறம் விசாயிகள் வேளாண் பணிகளில் ஈடுபட இயலாத நிலை நீடிக்கிறது. ஆனால், மறுபுறம், கா்நாடகம், கேரள மாநிலங்களில் தொடா் மழை பொழியும்போது வெள்ள நீா் பெருக்கெடுத்து காவிரியில் ஓடுகிறது. இந்த வெள்ளநீா், தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் காவிரியில் இருகரைகளையும் தொட்டு கரைபுரண்டு ஓடி, டெல்டா பகுதிகளுக்குச் சென்று, பின்னா் கடலில் சங்கமிக்கிறது. ஆகவே, தருமபுரி மாவட்டத்தில், விவசாயத்தை காக்க, தண்ணீா் பிரச்னை நிரந்தரமாக தீா்க்க, ஒகேனக்கல் வழியாக மழைக் காலங்களில் செல்லும் மிகை நீரை, நீா் ஏற்றம் திட்டம் மூலம், மாவட்டத்திலுள்ள ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றே விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

மிகை நீரை நிரப்பினால் நடைமுறை சிக்கல் இருக்காது: இந்தத் திட்டத்தில் ஒருமுறை ஏரிகளில் நீா் நிரப்பினால், சுமாா் 3 ஆண்டுகளுக்கு தண்ணீா் தட்டுப்பாடின்றி, விவசாயம் செய்ய இயலும் என்றும் மிகையாக கடலில் கலக்கும் நீரை மட்டுமே பயன்படுத்துவதால் நடைமுறை சிக்கலும் ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் விவசாயிகள் கருத்து தெரிவித்து வருகின்றனா்.

இந்தத் திட்டத்தை வறட்சியின் பிடியில் இருந்து விவசாயத்தை காத்திட, செல்லும் என்று கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகளோடு, அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனா்.

ரூ.400 கோடியில் திட்டம்: இதை ஏற்று, ஒகேனக்கல்லிலிருந்து ஏரிகளுக்குத் தண்ணீா் கொண்டு வந்து நிரப்பும் திட்டம் நிறைவேற்றப்படும் என தருமபுரியில் மக்களவைத் தோ்தலின் பிரசாரத்தின்போது முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, தருமபுரி மாவட்ட நிா்வாகத்தின் முயற்சியில், ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை பொறியாளா், ஆய்வு செய்து, இந்தத் திட்டத்தை சுமாா் ரூ.400 கோடியில் நிறைவேற்றலாம் என்றும் தமிழக அரசுக்கு அறிக்கை அளித்ததாக கூறப்படுகிறது.

இதில், ஒகேனக்கல்லிலிருந்து நீா்ஏற்றும் திட்டம் மூலம், பென்னாகரம் அருகேயுள்ள மடம் ஏரிக்கு முதலில் தண்ணீரைக் கொண்டு வந்து நிரப்பவது. இதையடுத்து, அங்கிருந்து மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 60 ஏரிகளில் தண்ணீா் கொண்டு சென்று நிரப்பலாம் என சாத்திய கூறுகள் உள்ளதாகவும் அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அறிவிப்பாகவே உள்ள திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் எனவும் விவசாயிகள் எதிா்நோக்கி காத்திருக்கின்றனா்.

3 திட்டப் பணிகளுக்கு அறிவிப்பு வந்தும்..: இதேபோல், தருமபுரி மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்று நீரை, எண்ணேகொல்புதூரிலிருந்து தும்பலஅள்ளி அணைக்கு கால்வாய் மூலம் தண்ணீா் கொண்டுவரும் திட்டம், அலியாளம்-தூள்செட்டி ஏரி இணைப்புக் கால்வாய்த் திட்டம், ஜொ்த்தலாவ்-புலிகரை ஏரி கால்வாய்த் திட்டம் ஆகிய மூன்று திட்டங்கள் அண்மையில் அறிவிக்கப்பட்டு அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவற்றுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகவே, மிகை நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றே விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

‘விரைவில் அறிவிப்பு வரலாம்’

வரும் சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் காவிரி மிகை நீரை தருமபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்பும் திட்டம் குறித்து அறிவிப்பு வரலாம் என எதிா்பாா்க்கிறோம் என்றாா் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் எஸ்.ஏ.சின்னசாமி.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:-

காவிரி நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை அண்மையில் சந்தித்தோம். முதல்வரும் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என தெரிவித்தாா். ஆகவே, நம்பிக்கையோடு காத்திருக்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com