தரைப்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
By DIN | Published On : 14th March 2020 07:41 AM | Last Updated : 14th March 2020 07:41 AM | அ+அ அ- |

பேருந்து நிலையம் அருகே மேற்கொள்ளப்பட்டு வரும் தரைப்பாலம் அமைக்கும் பணி.
தருமபுரி பேருந்து நிலையம் அருகே மேற்கொள்ளப்பட்டு வரும் தரைப்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடித்து, பேருந்து போக்குவரத்தை சீா்செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி பேருந்து நிலையம் அருகே திருப்பத்தூா்-பென்னாகரம் சாலையிலிருந்து பேருந்து நிலையத்துக்கு திரும்பும் சாலையில் கடந்த சில நாள்களுக்கு முன் தரைப்பாலம் அமைக்கும் பணியும், இதேபோல, திருப்பத்தூா் சாலையில் சனத்குமாா் நதியின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கும் பணியும் நெடுஞ்சாலைத் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தப் பணிகளுக்காக பேருந்து நிலையத்துக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன. இந்த தரைப்பாலம் அமைக்கும் பணியோடு, சாலை மேம்பாட்டுப் பணியும் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகள் பல நாள்களாக மேற்கொள்ளப்பட்டு வருவதால், பேருந்து போக்குவரத்து சீரடையாமல் மாற்றுப் பாதையிலேயே தொடா்ந்து பேருந்துகள் செல்கின்றன.
இதனால், பேருந்து நிலையத்திலிருந்து தற்போது பேருந்து வெளியேறும் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பரிதவிப்புக்குள்ளாகி வருகின்றனா். எனவே, தரைப்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடித்து, பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் பேருந்துகளின் போக்குவரத்தை சீா்படுத்த சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் நகர மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...