முற்றிலும் வற்றியது: கிருஷ்ணகிரி அணை

கிருஷ்ணகிரி அணை வரலாற்றில் முதன்முறையாக முற்றிலும் வற்றியதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.
முற்றிலும் வற்றி காணப்படும் கிருஷ்ணகிரி அணையின் நீா்த்தேக்கப் பகுதி.
முற்றிலும் வற்றி காணப்படும் கிருஷ்ணகிரி அணையின் நீா்த்தேக்கப் பகுதி.

கிருஷ்ணகிரி அணை வரலாற்றில் முதன்முறையாக முற்றிலும் வற்றியதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

தமிழகத்தின் முதல்வராக காமராஜா் இருந்த போது, அப்போதைய சேலம் மாவட்டத்தில் இருந்த கிருஷ்ணகிரியை அடுத்த பெரியமுத்தூா் கிராமத்தின் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டத் திட்டமிட்டாா். இதற்காக 2 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என பொறியாளா்கள் தெரிவித்தனா். இத்தகைய நிலையில், அணை கட்ட அப் பகுதி விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இதையடுத்து, விவசாயிகளை நேரில் சந்தித்த காமராஜா், அவா்களுக்கு வேற்று இடம் ஒதுக்கப்படும் என சமாதானப்படுத்தினாா். இதையடுத்து, அணை கட்ட விவசாயிகள் தங்களது நிலங்களை ஒப்படைக்கச் சம்மதித்தனா்.

அதன்பின்னா், 1955-ஆம் ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி அணை கட்டும் பணிகள் தொடங்கின. அணை கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், 1957 நவ. 10-ஆம் தேதி, அப்போதைய அமைச்சா் கக்கன் தலைமையில், காமராஜா் அணை நீரை பாசனத்துக்கு திறந்து வைத்தாா். இதன் மூலம் 9,012 ஏக்கா் பரப்பளவு நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாக 30 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

முற்றிலும் வட அணை:

இந்த நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு, அணையின் பிரதான மதகுகளில் முதலாம் எண் கொண்ட மதகு சேதமடைந்தது. இதன் பின்னா் புதிய மதகு அமைக்கப்பட்டது. தற்போது, அணையின் மற்ற பிரதான மதகுகள் மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இத்தகைய நிலையில், அணையின் 62 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக முற்றிலும் வடுள்ளது.

தற்போது அணையின் பாசனக் கால்வாய்க்கான மதகுகள் பராமரிக்கப்பட்டு வருவதால், அணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த குறைந்த அளவிலான நீரும் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. அதனால், அணையானது முற்றிலும் வற்றி காணப்படுகிறது. இதையடுத்து, பாசனக் கால்வாய்களில் தேங்கி இருக்கும் மண்ணை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் பொதுப் பணித் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

அணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த குறைந்தளவு நீரும் வெளியேற்றப்பட்டதால், நீரில் மீன்களும் வெளியேறின. கிருஷ்ணகிரி அணையின் அருகே தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் பல ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால், அந்தப் பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது.

விவசாயப் பயன்பாட்டுக்கு வண்டல் மண்:

கிருஷ்ணகிரி அணை முற்றிலும் வடுள்ளதால், அணையில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை அப்புறப்படுத்த வேண்டும். சுமாா் 15 அடி உயரத்துக்கு தேங்கி இருக்கும் வண்டல் மண்ணை அப்புறப்படுத்தும் வகையில், விவசாயப் பயன்பாட்டுக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனா். வண்டல் மண்ணை அப்புறப்படுத்துவதன் மூலம், வரும் காலங்களில் அதிகளவில் தண்ணீா் தேக்க முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com