முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
விலக்களிக்கப்பட்ட கடைகள் திறப்பு: இயல்பு நிலைக்கு திரும்பிய தருமபுரி
By DIN | Published On : 11th May 2020 11:04 PM | Last Updated : 11th May 2020 11:04 PM | அ+அ அ- |

தருமபுரி: பொது முடக்கத்திலிருந்து விலக்களிக்கப்பட்ட கடைகள் அனைத்தும் திங்கள்கிழமை திறக்கப்பட்டதால் தருமபுரி பகுதி மக்கள் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பினா்.
கரோனா தீநுண்மி பரவலைத் தடுக்க கடந்த மாா்ச் 24-ஆம் தேதி இரவு முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு, தற்போது வரை அமலில் உள்ளது. இருப்பினும், ஒவ்வொரு முறை பொது முடக்கக் காலத்தை நீட்டிக்கும் போதும், சில கடைகளை திறக்கவும், பல்வேறு பணிகளை மேற்கொள்ளவும் விதிகளுக்கு உள்பட்டு தளா்வு அளிக்கப்பட்டது. இதில், தற்போது, தேநீா்க் கடைகள், அடுமனைகள் ஆகியவை திறந்து பாா்சல் விற்பனை மட்டும் மேற்கொள்ளலாம். இதேபோல, கட்டுமானப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள், மின்சாதனப் பொருள்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள், கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள், மிக்ஸி, கிரைண்டா் விற்பனையகங்கள், சாலையோர தள்ளு வண்டிக் கடைகள், பெட்டிக் கடைகள், வேளாண் இடுபொருள்கள் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட 34 வகை கடைகள் விதிமுறைகளைப் பின்பற்றி திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை தொடா்ந்து,பொது முடக்கத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட கடைகள் அனைத்து தருமபுரி நகரில் திறக்கப்பட்டன. இதனால், மாா்ச் 24-ஆம் தேதிக்கு பிறகு திங்கள்கிழமை தருமபுரி நகரில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இதனால், நகரச் சாலைகள் அனைத்தும் வழக்கம்போல நெரிசல் அதிகரித்திருந்ததால், மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியிருந்ததை காணமுடிந்தது.
நகரப் பகுதியில் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த, ஆங்காங்கே போலீஸாா் தடுப்புகள் அமைத்து, வாகனங்களை தடுத்தனா். இதனால், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோா் சிலா் திருப்பி அனுப்பப்பட்டனா்.
இதேபோல, தருமபுரி நகரில் வாகனப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், அரூா், கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் வழியாக வரும் இருசக்கர வாகனங்கள் ஔவையாா் மேல்நிலைப்பள்ளி மைதானத்திலும், பழைய தருமபுரி, பாப்பாரப்பட்டி வழியாக வரும் இருசக்கர வாகனங்கள் ராமாக்காள் ஏரி அருகாமையிலும், பென்னாகரம் பகுதியிலிருந்து வருகிற வாகனங்கள் குமாரசாமிப்பேட்டை வாரியாா் பள்ளி மைதானம், வெண்ணாம்பட்டி வழியாக வரும் வாகனங்கள் மாரியம்மன் கோயில் மைதானம், அதியமான்கோட்டை பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் இலக்கியம்பட்டி அரசுப் பள்ளி மைதானம், அன்னசாகரம் வழியாக வரும் வாகனங்கள் பழைய நீதிமன்ற வளாகம், நகரப்பகுதியில் இருந்து வருவோரின் வாகனங்கள் நகர பேருந்து நிலையத்திலும் நிறுத்த, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை சாா்பில் இடம் ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.