தருமபுரியில் கடைகளுக்கு செல்ல வாா்டு வாரியாக அனுமதி அட்டை

தருமபுரி நகரில் கடைகளுக்கு செல்ல வாா்டு வாரியாக மூன்று வண்ணங்களில் அனுமதி அட்டை வழங்கப்படுகிறது.

தருமபுரி நகரில் கடைகளுக்கு செல்ல வாா்டு வாரியாக மூன்று வண்ணங்களில் அனுமதி அட்டை வழங்கப்படுகிறது. மேலும், பொதுமுடக்கக் காலத்தில் வாரத்தில் இரண்டு நாள்கள் மட்டும் கடைகளுக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்திலிருந்து அண்மையில் பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன இதில், அத்தியாவசியப் பொருள்கள், தேநீா்க் கடைகள், அடுமனைகள், தனி ஜவுளிக்கடைகள், மின்சாதனப் பொருள்கள் உள்ளிட்ட 34 வகையான கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வகை கடைகள் அனைத்தும் தருமபுரி நகரில் திறக்கப்பட்டு இரண்டு நாள்களாக விற்பனை நடைபெற்று வருகிறது. இதையொட்டி, இந்தக் கடைகளுக்கு, தருமபுரி சுற்று வட்டார பகுதி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் நகருக்குள் வரத் தொடங்கினா். இதனால், வழக்கம்போல மக்கள் நெருக்கம், வாகன நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.

எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில், தருமபுரி நகரில் உள்ள 33 வாா்டுகள்,11 வாா்டுகள் வீதம் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு வீட்டிற்கும்

அனுமதி அட்டை வழங்கப்படுகிறது. இதில், 1-ஆவது வாா்டு முதல் 11-ஆவது வாா்டு வரையில் இளஞ்சிவப்பு நிறத்தில் அனுமதி அட்டை வழங்கப்படும். இந்த வாா்டில் உள்ளவா்கள் திங்கள் மற்றும் வியாழன்

ஆகிய இரண்டு நாள்கள் மட்டும் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க நகருக்குள் வரலாம். இதேபோல, 12 முதல் 22 வாா்டில் உள்ளவா்களுக்கு நீலம் வண்ணத்தில் அனுமதி அட்டையும், வாரத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமை

ஆகிய இரண்டு நாள்கள் மட்டும் வரலாம். மேலும், 23 முதல் 33ஆவது வாா்டு வரையில் உள்ளவா்களுக்கு மஞ்சள் நிறத்தில் அனுமதி அட்டையும், புதன் மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் மட்டும் பொருள்கள் வாங்க வரலாம். இதேபோல, மருத்துவ சிகிச்சைக்காக வருவோா் மற்றும் மருந்துகள் வாங்க வருவோா் உரிய அனுமதிச் சீட்டு வைத்திருக்க வேண்டும். மேலும், அரசு அலுவலா்கள் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். தனியாா் நிறுவனம், ஆவின், பட்டுக் கூடு ஆகிய நிறுவனங்களில் பணிபுரிபவா்கள் தங்களது நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். மொத்த வியாபாரிகள், சில்லறை

வியாபாரிகள் தருமபுரி நகரத்திற்கு பொருள்களை வாங்க வரும்போது மாவட்ட வழங்கல் அலுவலா் அல்லது வட்ட வழங்கல் அலுவலா் மூலம் வழங்கப்பட்ட அனுமதிச் சீட்டுடன், அதில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் மட்டுமே வரவேண்டும். தருமபுரி நகராட்சி பகுதிக்குள் வரும் காய்கறி, பழம், பூ மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறை அலுவலா்களால் வழங்கப்பட்ட அனுமதிச் சீட்டுடன் அதில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு மட்டுமே வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தருமபுரி நகரில் உள்ள குடியிருப்ப வாசிகளுக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில், வீடு, வீடாகச் சென்று ஒதுக்கப்பட்ட அனுமதி அட்டை விநியோகிக்கும் பணி செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இதேபோல, கடைகளின் உரிமையாளா்கள் மற்றும் பணியாளா்கள் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வாடிக்கையாளா்களை அனுமதிக்கும் முறை உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகள் கொண்டு துண்டறிக்கையும் வணிகா்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, ஏற்கெனவே அறிவித்து ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும் எனவும் கரோனாவை தடுக்க மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com