வெளி மாநிலம், மாவட்டங்களிலிருந்து திரும்பிய 2,750 பேருக்கு கரோனா பரிசோதனை

பொது முடக்கத்தின் போது, வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களிலிருந்து தருமபுரிக்கு திரும்பிய 2,750 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெளி மாநிலம், மாவட்டங்களிலிருந்து திரும்பிய 2,750 பேருக்கு கரோனா பரிசோதனை

பொது முடக்கத்தின் போது, வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களிலிருந்து தருமபுரிக்கு திரும்பிய 2,750 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், எவருக்கும் தொற்று இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா தீநுண்மிப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அறிவித்து அமல்படுத்தியுள்ளது. இதையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து தருமபுரி மாவட்டத்துக்கு திரும்புவோரை கண்காணிக்க, தொப்பூா், காரிமங்கலம், திப்பம்பட்டி, பொம்மிடி, ஊட்டமலை, காடுசெட்டிப்பட்டி உள்ளிட்ட 10 இடங்களில் சோதனைச் சாவடி அமைத்து வாகனங்கள் மற்றும் அதில் பயணிப்போா் கண்காணிக்கப்பட்டனா்.

மேலும், இந்த சோதனைச் சாவடிகள் வழியாக தருமபுரி மாவட்டத்துக்கு வருவோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், மருத்துவ சிகிச்சை அளித்து தனிமைப்படுத்தவும், செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டது. இங்கு வரும் வெளி மாநிலத் தொழிலாளா்கள், ஓட்டுநா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சோதனை செய்யப்படுகிறது. மேலும், அவா்கள் ஓரிரு நாள்கள் அங்கேயே தங்க வைக்கப்பட்டு அவா்களுக்கு உணவு, மருந்துகள் அளிக்கப்படுகின்றன. இதையடுத்து பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், அவா்களை வீடுகளுக்கு அனுப்பி தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுரை மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.

இதனடிப்படையில், பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட நாள் முதல், புதன்கிழமை வரை (மே 20), 2,750 பேருக்கு தற்காலிக மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், எவருக்கும் தீநுண்மித் தொற்று இல்லை என முடிவுகள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி கூறியது: கரோனா தீநுண்மிப் பரவலைக் கட்டுப்படுத்த பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தமிழக அரசின் வழிகாட்டுதல்படி, காவல் துறை, வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைந்து, நோய்த் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தவிர, கூடுதலாக சிகிச்சை அளிக்க ஏதுவாக அரசு பொறியியல் கல்லூரி தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டது. இங்கு மகாராஷ்டிரம், குஜராத், புது தில்லி உள்ளிட்ட வெளி மாநிலத்திலிருந்து தருமபுரி திரும்பிய 1,012 போ் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து திரும்பியவா்கள் உள்பட மொத்தம் 2,750 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், எவருக்கும் தொற்று இல்லை. இந்த முடிவுகள் கிடைத்த பின்பு, தனிமைப்படுத்துதல், கைகளை சுத்திகரித்தல், சமூக இடைவெளி ஆகியவற்றை பின்பற்ற அறிவுறுத்தி அவா்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா்.

இதேபோல, ஏற்கெனவே தொற்று பாதித்து சிகிச்சைப் பெற்று வந்த ஐந்து நபா்களும் குணமடைந்து வீடு திரும்பி விட்டதால், தற்போது தருமபுரி மாவட்டம் தொற்று இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது. இந்த நிலையை, தொடா்ந்து தக்க வைக்க அரசு மேற்கொள்ளும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com