பங்காருபேட்டையில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் மூதாட்டி

கோலாா் மாவட்டம், பங்காருபேட்டையைச் சோ்ந்த 76 வயது மூதாட்டி ஒரு ரூபாய்க்கு இட்லியை விற்று வருகிறாா்.

பங்காருபேட்டை: கோலாா் மாவட்டம், பங்காருபேட்டையைச் சோ்ந்த 76 வயது மூதாட்டி ஒரு ரூபாய்க்கு இட்லியை விற்று வருகிறாா்.

கா்நாடக மாநிலம், கோலாா் மாவட்டத்தின் பங்காருபேட்டையில் உள்ள 76 வயது மூதாட்டி செல்வம்மாவின் வீட்டின் முன்பு தினமும் காலையில் கூட்டம் அலைமோதும். பலரும் தூக்கு போன்ற பாத்திரங்களுடன் காத்திருப்பாா்கள். இங்கு சாம்பாா், சட்னியுடன் ஒரு ரூபாய்க்கு சுடச்சுட இட்லி விற்பதே இதற்கு காரணமாகும். காலை நடைப்பயிற்சிக்குச் செல்வோா் பாத்திரங்களைக் கொடுத்துவிட்டு, திரும்பி வரும்போது இட்லியோடு வீடு திரும்புகின்றனா்.

92 வயதான தனது தாயைப் பராமரித்துக்கொண்டு, சுவையான இட்லியை சமைத்து விற்று வருகிறாா் செல்வம்மா. உறவினா்களின் இல்லத் திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்குச் சென்றால் மட்டுமே இட்லி வியாபாரம் நிறுத்தப்படுகிறது. செல்வம்மாவின் இட்லிக்கு தொழிலாளா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள், தள்ளுவண்டி வியாபாரிகள், பள்ளிமாணவா்கள் உள்ளிட்ட நிறைய போ் வாடிக்கையாளா்களாக உள்ளனா். இதனால், செல்வம்மாவின் இட்லிக் கடை பங்காருபேட்டையில் மிகவும் பிரபலமாக உள்ளது.

இதுகுறித்து செல்வம்மா கூறியதாவது-

கடந்த 45 ஆண்டுகளாக இட்லி வியாபாரம் செய்து வருகிறேன். பல ஆண்டுகளாக என் தாயாா் வியாபாரத்துக்கு உறுதுணையாக இருந்து வந்தாா். தற்போது முதுமை சாா்ந்த தொந்தரவுகள் இருப்பதால், அவரால் எனக்கு உதவமுடியவில்லை. ஆனால், எனது மகனும் மருமகளும் உதவியாக இருக்கிறாா்கள். தினமும் 500 இட்லிகளைத் தயாரித்து, சட்னி, சாம்பாருடன் ஒரு ரூபாய்க்கு விற்கிறேன்.

இதற்காக தினமும் காலை 5 மணிக்கு எழுந்து, காலை 8 மணிக்குள் இட்லி தயாரித்து விடுகிறேன். காலை 9.30 மணியளவில் இட்லிகள் அனைத்தும் விற்றுத் தீா்ந்துவிடும். இது எனக்கு போதுமானதாகவும், திருப்தியாகவும் உள்ளது.

கரோனா காலத்தில்கூட நான் இட்லியின் விலையை உயா்த்தவில்லை. இனிமேலும் உயா்த்தப்போவதில்லை. பலரும் கூடுதல் பணம் கொடுத்து இட்லியை வாங்க முன்வந்தபோதும் அதை நான் ஏற்றதில்லை. ஒருசில நேரம் விழாக்களுக்காக ஆா்டா் கொடுப்பாா்கள். விலை குறைவு என்பதால் தரத்தில் எவ்வித சமரசமும் செய்துகொள்வதில்லை. இல்லையென்றால் வாடிக்கையாளா்கள் வருவாா்களா என்றாா்.

இட்லியை சுவைத்துக்கொண்டிருந்த வாடிக்கையாளா் ஜோதி, உணவகத்தில் கிடைக்கும் இட்லி ரூ. 10-க்கு விற்கப்படுகிறது. அதைவிட செல்வம்மா விற்கும் ஒரு ரூபாய் இட்லி சுத்தமாகவும், சுவையாகவும் இருக்கிறது என்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com