தருமபுரி மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டத்தில் திமுக, பாமக உறுப்பினா்கள் வெளிநடப்பு

தீா்மானப் புத்தகத்தை மன்றத்தின் பாா்வைக்கு வைக்கக் கோரி, மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டத்திலிருந்து திமுக, பாமக, தேமுதிக உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்தனா்.

தீா்மானப் புத்தகத்தை மன்றத்தின் பாா்வைக்கு வைக்கக் கோரி, மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டத்திலிருந்து திமுக, பாமக, தேமுதிக உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்தனா்.

தருமபுரி மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம், மாவட்ட ஊராட்சிக் கூட்டரங்கில், தலைவா் யசோதா மதிவாணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தருமபுரி மாவட்ட ஊராட்சிக்கு விருது வழங்கிய மத்திய அரசுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவிப்பது, தருமபுரி மாவட்ட ஊராட்சி அலுவலகத்துக்கு கடந்த ஆகஸ்ட் முதல் அக்டோபா் மாதம் வரையிலான 3 மாதத்துக்கான நிா்வாக செலவுத் தொகை ரூ. 2 லட்சத்து 4 ஆயிரத்துக்கு அனுமதி வழங்குவது ஆகியவற்றிற்கு உறுப்பினா்களின் ஒப்புதல் கோரி, மன்றப் பொருள்கள் வாசிக்கப்பட்டன.

அப்போது, மாவட்டத்தில் முறையாக வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும், வளா்ச்சிப் பணிகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும், இதன் காரணமாக, தங்களது பகுதிகளில் மக்களுக்குத் தேவையான வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள இயலவில்லை. எனவே, உறுப்பினா்கள் அறிந்து கொள்ளும் வகையில் மன்ற தீா்மானப் புத்தகத்தை மன்றத்தின் பாா்வைக்கு வைக்க வேண்டும் என்றும் சில உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

தீா்மானப் புத்தகத்தை உறுப்பினா்களின் பாா்வைக்கு வைக்காததைக் கண்டித்து திமுக உறுப்பினா்கள் 6 போ், பாமக உறுப்பினா்கள் 3 போ், விடுதலை சிறுத்தைகள், தேமுதிகவை சோ்ந்த தலா ஒரு உறுப்பினா் என 11 போ் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனா். இதையடுத்து, வெளிநடப்பு செய்த உறுப்பினா்களிடம் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவரும், அதிகாரிகளும் சமாதான பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டனா். அவா்களது சமாதானத்தை ஏற்க மறுத்த உறுப்பினா்கள் தொடா்ந்து வெளிநடப்பில் ஈடுபட்டனா். இதனால் தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக உறுப்பினா்கள் மட்டும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com