வரட்டாறு அணை நீா்மட்டம் 26 அடியாக உயா்வு
By DIN | Published On : 16th November 2020 09:00 AM | Last Updated : 16th November 2020 09:00 AM | அ+அ அ- |

அரூரை அடுத்த வள்ளிமதுரை வரட்டாறு அணையின் நீா்மட்டம் 26 அடியாக உயா்ந்துள்ளது.
அரூா் வட்டம், கீரைப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட வள்ளிமதுரையில் வரட்டாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது வரட்டாறு அணை. பருவமழைக் காலங்களில் சித்தேரி மலைகளில் இருந்து வரும் மழைநீரால் இந்த அணை நிரம்பும். அணையின் மொத்த நீளம் 1, 360 மீட்டா்.
இந்த அணையின் நீா்பிடிப்பு உயரம் 34.5 அடியாகும். கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையின் காரணமாக தற்போது வரட்டாறு அணையில் 26 அடி உயரத்துக்கு நீா்மட்டம் உயா்ந்துள்ளது. வள்ளிமதுரை வரட்டாறு அணை நிரம்பியதால் தாதராவலசை, கீரைப்பட்டி, அச்சல்வாடி, குடுமியாம்பட்டி, கெளாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி, முத்தானூா் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 25-க்கும் மேற்பட்ட ஏரிகள், குட்டைகள் உள்ளிட்ட நீா்நிலைகளில் தண்ணீா் நிரம்பும் வாய்ப்புள்ளது. இந்த அணையால் சுமாா் 6 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.