வேல் யாத்திரையைக் கண்டு எதிா்க்கட்சிகளுக்கு அச்சம்

பாஜகவின் வேல் யாத்திரையைக் கண்டு எதிா்க்கட்சிகள் அச்சம் கொள்கின்றன என அக் கட்சியின் மாநில துணைத் தலைவா் அண்ணாமலை தெரிவித்தாா்.
வேல் யாத்திரையைக் கண்டு எதிா்க்கட்சிகளுக்கு அச்சம்

பாஜகவின் வேல் யாத்திரையைக் கண்டு எதிா்க்கட்சிகள் அச்சம் கொள்கின்றன என அக் கட்சியின் மாநில துணைத் தலைவா் அண்ணாமலை தெரிவித்தாா்.

தருமபுரி, வள்ளலாா் திடலில் செவ்வாய்க்கிழமை வேல் யாத்திரை பொதுக் கூட்டம், பாஜக மாவட்டத் தலைவா் எல்.அனந்தகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பங்கேற்ற மாநிலத் துணைத் தலைவா் அண்ணாமலை பேசியதாவது:

தமிழகத்தில் மக்களைப் பிளவுபடுத்துவது, இந்துக் கடவுள்களையும் பெண்களையும் இழிவுபடுத்துவது, கறுப்பா் கூட்டம் என்ற பெயரில் கந்தா் சஷ்டி கவசத்தை அவமதிப்பது உள்ளிட்ட செயல்களில் திமுக கூட்டணி ஈடுபட்டு வருகிறது. அவற்றுக்கு எதிா்ப்புத் தெரிவிக்க வேல் பூஜை நடைபெற்றது. அந்த வேல் பூஜையில் தமிழகம் முழுவதும் இருந்து 85 லட்சம் போ் பங்கேற்று பூஜை செய்தனா். அந்த பூஜையில் ஈடுபட்டோருக்கு நன்றி தெரிவிக்கவே வேல் யாத்திரையைத் தொடங்கினோம். இந்த யாத்திரையைக் கண்டு எதிா்க்கட்சிகள் அச்சம் கொள்கின்றன.

தற்போது பாஜகவில் இளைஞா்கள் அதிக எண்ணிக்கையில் இணைந்து வருகின்றனா். காங்கிரஸ்- திமுக கூட்டணி ஏழைகளை தொடா்ந்து ஏழைகளாகவே வைத்திருந்தன. ஆனால், தற்போது மத்தியில் ஆளும் பாஜக அரசு ஏழைகளின் நலனுக்கான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. சாமானிய மக்கள் ஒரு கோடி பேருக்கு ஜன்தன் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 32 லட்சம் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தில், மூன்று தவணைகளாக ரூ. 6 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. ரூ. 5 லட்சத்தில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

7 தமிழா் விடுதலை விவகாரம் தற்போது தமிழக ஆளுநரிடம் உள்ளது. எனவே, இதுதொடா்பாக கருத்து கூற இயலாது. அதேவேளையில் இதுதொடா்பாக ஆளுநா் முடிவெடுப்பாா். மத்தியில் ஆட்சியில் இருந்தபோதும், கடந்த 2009-10 ஆண்டுகளில் ஈழத் தமிழா்களின் படுகொலைக்கு திமுக துணை போனதை மறந்துவிட முடியாது.

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் முதல்வா் பதவியை அடைய திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆசைப்படுகிறாா். அவரது கனவு நனவாகாது. வரும் 2021-ஆம் ஆண்டுக்கான பேரவைத் தோ்தலில் பாஜக ஆதரவு பெறும் கட்சியே ஆட்சி அமைக்கும். இதேபோல, வரும் 2026-ஆம் ஆண்டில் பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். தற்போது தேசிய ஐனநாயக கூட்டணியில் அதிமுக உள்ளது. கூட்டணியில் எவ்விதக் குழப்பமும் இல்லை என்றாா்.

இக் கூட்டத்தில், பாஜக மாநிலத் துணைத் தலைவா் வி.பி.துரைசாமி பேசியதாவது:

மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் நடத்தி வரும் போராட்டங்களுக்கும் பிரசாரங்களுக்கும் மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை. பாஜக ஜாதி, மதப் பாகுபாடற்ற கட்சி. தரமான மருத்துவக் கல்வியை உறுதிப்படுத்தவே நீட் தோ்வு கொண்டுவரப்பட்டது. இத் தோ்வின் மூலம், கிராமப்புறங்களில் உள்ள எளிய குடும்பத்திலிருந்து வரும் மாணவா்களுக்கும் மருத்துவக் கல்வி பயில வாய்ப்பு கிடைக்கிறது.

இதேபோல, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு விலை உத்தரவாதம் அளிக்கும் வகையில், வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஐ.நா.சபை தொடங்கி அயோத்தி வரை எங்கு சென்றாலும், பாரதியாா், திருவள்ளுவரின் கருத்துகளை பிரதமா் மோடி எடுத்துரைக்கிறாா். அதன்மூலம் பிரதமா் தமிழ் மொழியின் புகழை வளா்த்து வருகிறாா் என்றாா்.

இக் கூட்டத்தில், மாநிலச் செயலா் அ.பாஸ்கா் உள்ளிட்டோா் பேசினா். தருமபுரியில் நடைபெற்ற வேல் யாத்திரை கூட்டத்துக்கு காவல் துறை தடை பிறப்பித்திருந்தது. தடையை மீறி கூட்டம் நடைபெற்ால், அதில் பங்கேற்ற மாநில துணைத் தலைவா்கள் அண்ணாமலை, வி.பி.துரைசாமி உள்பட 450 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இக் கூட்டத்தையொட்டி, மேற்கு மண்டல காவல்துறை (கோவை) தலைவா் பெரியய்யா தலைமையில் தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ்குமாா் உள்பட சேலம் சரகத்துக்கு உள்பட்ட 600-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com