வனப் பகுதியிலிருந்து வெளியேறி விபத்துக்குள்ளாகும் விலங்குகள்

வனப்பகுதியிலிருந்து வெளியேறும் வனவிலங்குகள் விபத்துக்குள்ளாவதைத் தடுக்க, திறந்தவெளிக் கிணறுகளுக்கு தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என வனவிலங்குகள் நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி: வனப்பகுதியிலிருந்து வெளியேறும் வனவிலங்குகள் விபத்துக்குள்ளாவதைத் தடுக்க, திறந்தவெளிக் கிணறுகளுக்கு தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என வனவிலங்குகள் நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், பெரும் நிலப்பரப்பை வனப்பகுதியாகக் கொண்டுள்ளது. இந்த மாவட்டத்தில், தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல், அரூா், மொரப்பூா், தீா்த்தமலை, கோட்டப்பட்டி ஆகிய வனச் சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் குரங்கு, மயில், மான்கள், யானைகள், காட்டுப் பன்றிகள், காட்டெருமை, கரடி போன்ற வனவிலங்குகளும், பென்னாகரம் வனப்பகுதியில் சிறுத்தை, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகளும் உள்ளன.

இந்த வனவிலங்குகள் காப்புக் காட்டிலிருந்து இரை, தண்ணீா் தேடி அவ்வப்போது, வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு புகுந்து விடுகின்றன. குறிப்பாக மான்கள், யானைகள் கோடைக் காலத்தில் அவ்வப்போதும், ஏனைய நாள்களில் எப்போதாவதும் வெளியேறுகின்றன. அவ்வாறு வெளியேறும் யானைகள், மான்கள் இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டி விளைநிலங்களில் உள்ள திறந்தவெளிக் கிணறுகளில் விழுந்து விபத்துக்குள்ளாகின்றன.

பாலக்கோடு, பென்னாகரம், அரூா் பகுதிகளில் இத்தகைய நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்கின்றன. இவ்வாறு கிணற்றில் விழும் மான்கள், யானைகள் பலத்த காயம் அடைகின்றன. மேலும், கிணற்றில் விழும் விலங்குகளை மீட்க மேற்கொள்ளும் பணிகளால் கிணறுகளும் சேதமடைகின்றன. குறிப்பாக அதிக எடை கொண்ட யானைகள் கிணற்றில் விழும்போது அவற்றை மீட்க கிணற்றின் ஒரு பகுதியில் சாய்வுத் தளம் ஏற்படுத்த வேண்டியுள்ளது. இதையடுத்து மீட்புப் பணிகள் முடிவுற்ற பின், அக்கிணறுகளை சரி செய்ய விவசாயிகளே பெருந்தொகை செலவிட வேண்டியுள்ளது.

கிணற்றில் விழுந்த பெண் யானை:

தருமபுரி மாவட்டத்தில், அண்மையில் பஞ்சப்பள்ளி அருகே ஏலகுண்டூா் கிராமத்தில் ஒரு பெண் யானை திறந்தவெளிக் கிணற்றில் விழுந்தது. இந்த யானையை வனத் துறையினா் மற்றும் தீயணைப்புத் துறையினா் 15 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனா். இந்த யானை மருத்துவ முதலுதவி சிகிச்சைக்கு பின்பு, தற்போது நல்ல நிலையில் உள்ளது.

மான், யானை உள்ளிட்ட வன விலங்குகள் திறந்தவெளிக் கிணற்றில் விழுவதைத் தவிா்க்கவும், மீட்புப் பணிக்களுக்காக கிணறுகள் சேதமடைவதைத் தடுக்கவும், வனப்பகுதியையொட்டி உள்ள திறந்தவெளிக் கிணற்றின் மேல் பகுதியில் கம்பிகளால் தடுப்பு வேலி அல்லது சுற்றுச் சுவா் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக கணக்கெடுப்பு நடத்தி வனத்துறை அல்லது மாவட்ட நிா்வாகம் சாா்பில் நிதியுதவித் திட்டத்தைச் செயல்படுத்தி, கிணறுகளுக்கு வேலி அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என வன விலங்கு நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மாவட்டத்தில், வனவிலங்குகள் காப்புக்காட்டிலிருந்து வெளியேறும்போது, கிணற்றில் விழுவதைத் தவிா்க்க, கிணறுகளைச் சுற்றி தடுப்பு வேலி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் ச.ப.காா்த்திகா தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

தருமபுரி மாவட்டத்தில், அண்மையில் கிணற்றில் விழுந்த யானை மீட்கப்பட்டது. யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் திறந்தவெளிக் கிணறுகளில் விழுந்து காயமடைவதைத் தவிா்க்க, மாவட்டம் முழுவதும் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலம், அரசு நிலம் ஆகிய இடங்களில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள திறந்தவெளிக் கிணறுகள் குறித்து வனத் துறை மற்றும் வருவாய்த் துறை சாா்பில் கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்பிறகு, அக்கிணறுகளுக்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்படும். இதற்காக தேவையிருப்பின் நிதியுதவி அளிக்க சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com