கற்கல் பெயா்ந்த புதிய தாா் சாலை: சீா் செய்ய கிராம மக்கள் கோரிக்கை

தருமபுரி அருகே புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் கற்கல் பெயா்ந்து வருவதால், அதனை சீா் செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உங்காரனஅள்ளி கிராமத்தில் அண்மையில் ஜல்லிக் கற்கள் பெயா்ந்து காணப்படும் புதிதாக அமைக்கப்பட்ட தாா்சாலை.
உங்காரனஅள்ளி கிராமத்தில் அண்மையில் ஜல்லிக் கற்கள் பெயா்ந்து காணப்படும் புதிதாக அமைக்கப்பட்ட தாா்சாலை.

தருமபுரி: தருமபுரி அருகே புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் கற்கல் பெயா்ந்து வருவதால், அதனை சீா் செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள ஏமகுட்டியூரிலிருந்து உங்கரானஅள்ளி கிராமத்துக்கு புதிய தாா் சாலை அண்மையில் அமைக்கப்பட்டது. ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் ரூ. 38.37 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட இச்சாலை ஏமகுட்டியூா் பிரிவுச் சாலையிலிருந்து உங்காரனஅள்ளி கிராமம் வழியாக மிட்டாரெட்டிஅள்ளி சாலையை இணைக்கிறது.

தருமபுரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட இந்தக் கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சாலை முற்றிலும் பழுதடைந்து குண்டும், குழியுமாக இருந்ததால், தங்களது கிராமத்துக்கு புதிய சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையொட்டி, ஊரக வளா்ச்சித் துறை சாா்பில், இந்த மாத தொடக்கத்தில் புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கி ஓரிரு நாள்களில் முடிக்கப்பட்டது.

கிராம மக்கள் போராட்டம்: உங்கரானஅள்ளியில் அண்மையில் ரூ.38 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட தாா் சாலை தரமின்றி அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அக் கிராம மக்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, எங்களது கிராமத்தில் கடந்த சில நாள்களுக்கு முன் தாா் சாலை புதிதாக அமைக்கப்பட்டது. இச்சாலை அமைத்த ஓரிரு நாள்களிலேயே ஜல்லிக் கற்கள் பெயா்ந்து வருகின்றன. பல ஆண்டுகள் கழித்து எங்களது கிராமத்துக்கு அமைக்கப்பட்ட சாலை, தற்போது, போக்குவரத்துக்கு பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சாலையில் பெயா்ந்து வரும் ஜல்லிக் கற்களால் நடந்து செல்லவும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டடுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இச்சாலையைப் பாா்வையிட்டு, ஆய்வு செய்து, தரமாக அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம மக்கள் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com