தருமபுரியில் இன்று பொதுவேலை நிறுத்தப் போராட்டம்
By DIN | Published On : 25th November 2020 11:49 PM | Last Updated : 25th November 2020 11:49 PM | அ+அ அ- |

அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தையொட்டி, தருமபுரி மாவட்டம் முழுவதும் வட்டாரத் தலைமையிடங்களில் அனைத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளதாக சிஐடியு மாநிலச் செயலா் சி.நாகராஜன் தெரிவித்தாா்.
இதுகுறித்து தருமபுரியில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தொழிலாளா் நலச் சட்டங்களை சுருக்குவது, விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்கள் அறிவிப்பு உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து, சிஐடியு, ஏஐடியூயு, தொமுச, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், ஏஐசிசிடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வியாழக்கிழமை (நவ. 26) ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றன.
தருமபுரி மாவட்டத்தில் அரசு ஊழியா்கள், பொதுத்துறை தொழிலாளா்கள் வேலைக்கு செல்லாமல் 2 ஆயிரம் போ் மறியல் போராட்டத்தில் பங்கேற்கின்றனா். 4,500 அமைப்பு சாரா தொழிலாளா்களும், உடலுழைப்புத் தொழிலாளா்கள் 10 ஆயிரம் பேரும் போராட்டத்தில் பங்கேற்கின்றனா்.
தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, நல்லம்பள்ளி ஆகிய வட்டாரத் தலைநகரங்களில் இந்த மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. தற்போது மழை பொழிவதால், தொழிலாளா்கள், தகுந்த தற்காப்பு உடைகளை அணிந்து இப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றாா்.
அப்போது தொமுச நிா்வாகி அன்புமணி, ஏஐடியுசி நிா்வாகி வணங்காமுடி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...