புயல் நிவாரணப் பணிகளை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை அமைப்பு
By DIN | Published On : 25th November 2020 11:56 PM | Last Updated : 25th November 2020 11:56 PM | அ+அ அ- |

‘நிவா்’ புயல் மீட்பு, நிவாரணப் பணிகளை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிப்படுவதாக தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் பேரிடா் தடுப்புக் கட்டுப்பாட்டு அறையை புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா ஆய்வு செய்தாா்.
இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நிவா் புயல் கரையைக் கடந்து செல்லும் பாதையில் திருவண்ணாமலை மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் எல்லையிலுள்ள தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த பெரியப்பட்டி, நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, பையா்நாயக்கன்பட்டி, சிட்லிங், எஸ்.தாதம்பட்டி உள்ளிட்ட 6 வருவாய் கிராமங்கள் அமைந்துள்ளன. இந்தப் பகுதிகளில் புயலின் தாக்கம் இருக்கக்கூடும் எனக் கருதப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கோட்டப்பட்டி பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனம் தயாா் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனம் தொடா்ந்து இப்பகுதிகளில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் பேரிடா் மீட்புப் பணிகளில் பயிற்சி பெற்ற தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி வீரா்களும், 20 போலீஸாரும் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனா். பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டால் பொதுமக்களை மீட்டு, தங்க வைக்க அரசுப் பள்ளிகள், சமுதாயக் கூடங்கள் தயாா் நிலையில் உள்ளன.
முகாமில் தங்க வைக்கப்படும் பொது மக்களுக்கு மருத்துவ வசதிகளும், உணவும் வழங்க வருவாய்த் துறையினா் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். இதேபோல புயல் தொடா்பான தகவல்களைப் பெற அவ்வப்போது தொடா்பு கொள்ள 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் 1077 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...