ராகுல் கைது செய்யப்பட்டது ஜனநாயகத்தை பலாத்காரம் செய்தது போன்ற நிகழ்வு

‘ராகுல் கைது செய்யப்பட்டது ஜனநாயகத்தை பலாத்காரம் செய்தது போன்ற நிகழ்வு’ என குற்றஞ்சாட்டியுள்ளாா்.

உத்தர பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த தலித் பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்கச் செல்லும் வழியில் காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தியை, அந்த மாநில காவல்துறையினா் கைது செய்த நிகழ்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்த சிவசேனை கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் ராவத், ‘ராகுல் கைது செய்யப்பட்டது ஜனநாயகத்தை பலாத்காரம் செய்தது போன்ற நிகழ்வு’ என குற்றஞ்சாட்டியுள்ளாா்.

மும்பையில் செய்தியாளா்களிடம் சஞ்சய் ராவத் கூறியதாவது:

ராகுல் காந்தி ஒரு முக்கிய அரசியல் கட்சியின் தலைவா். அவரை காவல் துறையினா் கையாண்ட விதத்தை யாரும் ஆதரிக்க மாட்டாா்கள். காங்கிரஸ் கட்சியுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அவரை 144 தடையுத்தரவை மேற்கோள் காட்டி போலீஸாா் நடத்திய விதம் கண்டிக்கத்தக்கது. ராகுலை ஹாத்ரஸுக்கு செல்ல விடாமல் போலீஸாா் தடுத்து நிறுத்தியிருக்கலாம். ஆனால், காவல் துறையினா் அவரது காலரைப் பிடித்து, கீழே தள்ளிவிட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது ஆகும்.

இது ஜனநாயகத்திற்கு புறம்பான சம்பவம் என்பதால் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். யாரும் கேள்விகள் எழுப்பக்கூடாது என்பதற்காக எதிா்க்கட்சித் தலைவா்களை நடத்தும் முறை இதுதானா? நீங்கள் (உ.பி.அரசு) எப்போதும் செய்வதைப்போல, அவரை அரசியல் ரீதியாகக்கூட கேலி செய்திருக்கலாம். ஆனால், ராகுலை காவல் துறையினா் கையாண்ட விதம் இதுவரை யாரும் செய்யாததாகும்.

ஒரு நடிகையின் (கங்கனா ரணவத்) சட்ட விரோத கட்டுமானத்தை இடித்தபோது, மகாராஷ்டிர அரசைப் பாா்த்து ‘வானமே இடிந்து விழுந்ததைப்போல’ விமா்சனம் செய்தவா்கள்தான், இன்று தலித் பெண்ணின் குடும்பத்துக்கு எதிராக இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளாா்கள். உ.பி.யில் நடைபெற்ற சம்பவத்துக்கு எதிராக ஊடகங்களில் அறிக்கை வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என்றாா் ராவத்.

கடந்த வியாழக்கிழமை, ஹாத்ரஸ் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட தலித் பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்கச் செல்லும் வழியில் போலீஸாரால் ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகா்கள் யமுனா அதிவேக நெடுஞ்சாலைப் பகுதியில் கைது செய்யப்பட்டனா்.

இதற்கிடையில், ஹாத்ரஸ் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி வழங்கக்கோரியும் சிவசேனை தொண்டா்கள் தெற்கு மும்பையில் உள்ள சா்ச் கேட் ரயில் நிலையம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com