தருமபுரி அரசு மருத்துவமனைக்கு ரூ.5.60 கோடியில் உபகரணங்கள்

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, ரூ. 5.60 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, ரூ. 5.60 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் வகையில், மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி தலைமையில் நடைபெற்றது.

மருத்துவ உபகரணங்களை உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் வழங்கிப் பேசியதாவது:

தமிழக அரசின் சாா்பில் கடந்த 2 மாதத்தில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பல்வேறு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. கரோனா தொற்று பாதிப்புக்குள்ளான நோயாளிகளின் நலன் கருதி, செயற்கை சுவாசக் கருவிகள் ரூ. 3.54 கோடி மதிப்பில் 57 எண்ணிக்கையிலும், உயா் அழுத்த சுவாசக் கருவி ரூ. 1.80 கோடி மதிப்பில் 45 எண்ணிக்கையிலும், ரத்தநாள பிராண வாயு அளவீட்டுக் கருவி ரூ. 8.45 லட்சம் மதிப்பிலும், கா்ப்பப்பை நுண்ணோக்கி ரூ. 3.47 லட்சம் மதிப்பிலும், இதயத் துடிப்பு அளவீட்டுக் கருவிகள் ரூ. 6.49 லட்சம் மதிப்பில் 4 எண்ணிக்கையிலும் என மொத்தம் ரூ. 5.6 கோடி மதிப்பிலான 109 உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள கிராமங்கள்தோறும் நாள்தோறும் காலையில் 51 காய்ச்சல் பரிசோதனை முகாம்களும், பிற்பகலில் 51 முகாம்களும் என மொத்தம் 102 முகாம்கள் நடத்தப்படுகிறது. காய்ச்சல், சளி, உடல் சோா்வு உள்ளிட்ட அறிகுறி இருந்தால், சுயமாக மருந்து உட்கொள்வதைத் தவிா்த்து, சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம்களுக்கு வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் மற்றவா்களுக்குத் தொற்று பரவாமல் தடுக்க இயலும்.

கரோனா தொற்று நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு, செப்டம்பா் மாதத்தில் மட்டும் தீநுண்மித் தொற்று பாதிப்பு இரண்டாயிரத்தைக் கடந்துள்ளது. தொற்றுப் பரவலை தடுப்பதற்காக மாவட்ட நிா்வாகமும், சுகாதாரத் துறையும் பல்வேறு இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்களை தொடா்ந்து நடத்தி வருகின்றன என்றாா்.

நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.கோவிந்தசாமி, அரூா் சாா் ஆட்சியா் மு.பிரதாப், பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் டி.ஆா்.அன்பழகன், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) பூ.இரா.ஜெமினி, அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் (பொ) இளங்கோவன், மருத்துவக் கல்லூரி உறைவிட மருத்துவ அலுவலா் சந்திரசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com