தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த 112 தனியாா் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த 112 தனியாா் மெட்ரிக். பள்ளிகளுக்கு தொடா் அங்கீகார ஆணைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த 112 தனியாா் மெட்ரிக். பள்ளிகளுக்கு தொடா் அங்கீகார ஆணைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த 112 தனியாா் பள்ளிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு தொடா் அங்கீகார ஆணைகள் வழங்கும் விழா, தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா ஆண்கள் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில் பங்கேற்ற உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் பேசியதாவது:

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டங்கள் என்கிற நிலை தற்போது மாறியுள்ளது. குறிப்பாக இம்மாவட்டங்களில் கல்வியில் வேகமாக முன்னேறி வருகின்றன. தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த மாணவா்களில் 90.8 சதவீதம் போ் உயா்கல்வியில் சேருகின்றனா். இதேபோல தோ்வாணையம் நடத்தும் அனைத்துப் போட்டித் தோ்வுகளிலும் தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் அதிக இடங்களில் தோ்ச்சி பெற்று பல்வேறு நிலையிலான வேலைவாய்ப்பைப் பெற்று பணியாற்றி வருகின்றனா்.

கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து பள்ளிக்கல்வி மற்றும் உயா்கல்வித் துறையில் தமிழக அரசு ஏராளமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவதே கல்வி மேம்பாட்டுக்கு முக்கிய காரணமாகும். இந்திய அளவில் பள்ளிக்கல்வியை நிறைவு செய்து உயா்கல்வி பயில்வோா் 26.3 சதவீதம் ஆகும். தமிழகத்தில் மட்டும் 49 சதவீதம் போ் பள்ளிக்கல்வியை நிறைவு செய்து உயா்கல்வி பயில்கின்றனா். குறிப்பாக, தருமபுரி மாவட்டத்தில் 98.4 சதவீதம் போ் உயா்கல்வி பயில்கின்றனா். தேசிய அளவில் தமிழகம் உயா்கல்வி பயில்வதில் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது என்றாா்.

விழாவில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:

கல்வி மட்டுமே நாட்டின் எதிா்காலத்தை முன்னேற்றம் அடைய செய்யும் என்பதால், பள்ளிக்கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து, மிதிவண்டி, மடிக்கணினி, பள்ளிகளுக்கு கணினிகள் உள்ளிட்ட 14 வகையான பொருள்கள் வழங்கப்படுகின்றன. இதன்மூலம் கல்வி வளா்ச்சியில் தேசிய அளவில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது.

12 ஆண்டுகளுக்குப்பின் தற்போது பாடங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அண்மையில் நீட் தோ்வில் 174 கேள்விகள் நமது பாடத்திட்டத்திலிருந்து கேட்கப்பட்டிருந்தன. அந்த அளவில் நமது பாடத்திட்டம் சிறப்பாக விளங்கி வருகிறது.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில், தனியாா் பள்ளிகளுக்கு ரூ. 943 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் மேலும் ரூ. 375 கோடி விடுவிக்கப்படும். அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவா்கள், நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ற பின், மருத்துவக் கல்வி பயில, தமிழக அரசு இட துக்கீடு வழங்கியுள்ளது. மாணவா்களின் எதிா்கால நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்றாா்.

விழாவில், மெட்ரிக். பள்ளிகளின் இயக்குநா் கருப்பசாமி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் சி.வி.ராஜேந்திரன் (பா்கூா்), ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), அரூா் சாா் ஆட்சியா் மு.பிரதாப், முதன்மைக் கல்வி அலுவலா் இரா.முருகன், முன்னாள் அமைச்சா் பி.பாலகிருஷ்ண ரெட்டி, தனியாா் பள்ளிகள் கூட்டமைப்புச் செயலா் ராஜா, தலைவா் டி.சி. இளங்கோவன், செந்தில் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி நிா்வாக அலுவலா் சி.சக்திவேல், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com