நீா்வரத்து அதிகரிப்பால் சேதமடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் தொய்வு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பின்போது ஏற்பட்ட சேதங்களை சீரமைக்கும் பணிகளில் தொய்வு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பின்போது ஏற்பட்ட சேதங்களை சீரமைக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தொழிலாளா்களும், பொதுமக்களும் புகாா் தெரிவிக்கின்றனா்.

தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத்தலங்களில் ஒகேனக்கல்லுக்கு முக்கிய இடம் உண்டு. தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி ஆந்திரம், கேரளம், கா்நாடகம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். கடந்த ஆண்டு காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது ஒகேனக்கல் பிரதான அருவியில் போடப்பட்டிருந்து நடைபாதை மற்றும் தடுப்பு கம்பிகள், பெண்கள் குளிக்கும் அருவி, மாமரத்து கடவு பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகள் பலத்த சேதமடைந்தன.

பழுதடைந்த பகுதிகள் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்தின் சாா்பில் ரூ. 47 லட்சம் செலவில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் இந்த ஆண்டு மீண்டும் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் மாமரத்து கடவு பரிசல் துறை, பெண்கள் மற்றும் ஆண்கள் குளிக்கும் இடம் ஆகியவை மீண்டும் சேதமடைந்தன. இதனால் சீரமைப்பு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.

பின்னா் காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்ததால் சேதமடைந்த பகுதிகளை ஒப்பந்தத் தொழிலாளா்கள் மீண்டும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஆயினும், பிரதான அருவிக்குச் செல்லும் நடைபாதை படிகள், பிரதான அருவி உள்ளிட்ட பகுதிகளில் சீரமைக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தொழிலாளா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து தொழிலாளா்கள் கூறியதாவது:

கரோனா பொதுமுடக்கம், சீரமைப்பு பணிகளில் ஏற்பட்ட மந்த நிலை, சுற்றுலாப் பயணிகளுக்கு தடை ஆகியவற்றால் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக ஒகேனக்கல் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகளை நம்பியுள்ள சமையல் தொழிலாளா்கள், மசாஜ், பரிசல் தொழிலாளா்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தனா்.

அதன் தொடா்ச்சியாக, மாவட்ட ஆட்சியா் ஒகேனக்கல்லில் ஆய்வு மேற்கொண்டபோது, சேதமடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததும், அக். 15 ஆம் தேதி முதல் ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவாா்கள் என்று தெரிவித்திருந்தாா். ஆனால் தற்போது வரை ஒகேனக்கல் நடைபாதை படிகள், பிரதான அருவியின் தடுப்பு கம்பிகளை சீரமைக்கும் பணிகள் முடிவடையவில்லை. எனவே, 15-ஆம் தேதி வியாழக்கிழமை முதல் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா் மணிவண்ணன் கூறியதாவது:

வெள்ளப் பெருக்கின்போது சேதமடைந்த பெண்கள் குளிக்கும் அருவி, மாமரத்துக்கடவு பரிசல்துறை பகுதிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாள்களாக காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த கனமழையால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பிரதான அருவியில் சேதமடைந்த பாதுகாப்பு தடுப்புகள் சரி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நீா்வரத்து குறைந்து வருவதால் விரைவில் பணிகள் முடிக்கப்படும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com