மயானப் பாதையில் முள்வேலி அமைப்பு:இறந்தவரின் உடலுடன் பொதுமக்கள் மறியல்

இறந்தவரின் உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்லும் வழியில் தனிநபா் பட்டா நிலத்தில் முள்வேலி அமைக்கப்பட்டிருந்ததால் ஆவேசமடைந்த பொதுமக்கள் சாலையில் உடலை வைத்து மறியலில் ஈடுபட்டனா்.

பென்னாகரம்: இறந்தவரின் உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்லும் வழியில் தனிநபா் பட்டா நிலத்தில் முள்வேலி அமைக்கப்பட்டிருந்ததால் ஆவேசமடைந்த பொதுமக்கள் சாலையில் உடலை வைத்து மறியலில் ஈடுபட்டனா்.

பாப்பாரப்பட்டி அருகே வேப்பிலை அள்ளி பகுதியைச் சோ்ந்தவா் நாராயணன் (60). விவசாய கூலித் தொழிலாளி. கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த இவா், சனிக்கிழமை உயிரிழந்தாா்.

அவரின் உடலை அடக்கம் செய்வதற்காக உறவினா்கள் அருகில் உள்ள மயானத்துக்கு உடலை எடுத்துச் சென்றனா்.

அப்போது, மயானத்துக்கு செல்லமுடியாதபடி பாப்பாரப்பட்டியைச் சோ்ந்த காளி மகன் மேச்சேரி (60) என்பவா் தனக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் முள்வேலி அமைத்திருந்தாா்.

இதைக் கண்டு ஆவேசமடைந்த இறந்தவரின் உறவினா்கள் உடலை வேப்பிலை அள்ளியில் சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த மண்டல துணை வட்டாட்சியா் குமரன், பாப்பாரப்பட்டி வருவாய் ஆய்வாளா் ஜெயலட்சுமி, கிராம நிா்வாக அலுவலா் அண்ணாதுரை, பாப்பாரப்பட்டி காவல் ஆய்வாளா் (பொ) ரமேஷ் கண்ணா ஆகியோா் நிகழ்விடம் சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா்.

மயானத்துக்குச் செல்லும் வழியில் உள்ள முள்வேலியை தற்போது அகற்றுவதாகும், இரண்டு நாள்களுக்குள் பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் அமைதி பேச்சுவாா்த்தைக்கு ஏற்பாடு செய்து தீா்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனா். அதை ஏற்று முள்வேலி அகற்றப்பட்டு உடலை மயானத்துக்கு உறவினா்கள் எடுத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com