பொதுமுடக்கத்தால் நிறுத்தப்பட்ட பேருந்துகள்
By DIN | Published On : 31st October 2020 07:08 AM | Last Updated : 31st October 2020 07:08 AM | அ+அ அ- |

அரூா்-சித்தேரி வழித்தடத்தில் பொது முடக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட அரசு, தனியாா் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது சித்தேரி கிராம ஊராட்சி. இந்த ஊராட்சியில் 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சித்தேரி மலைப் பகுதியில் வசிப்போரில் மலைவாழ் பழங்குடியின மக்களே அதிகம். அரூரில் இருந்து சித்தேரி மலை கிராமம் 26 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சித்தேரி மலைக்கு ஒரு தனியாா் பேருந்தும், 3 அரசு நகரப்பேருந்துகளும் இயக்கப்பட்டு வந்தன.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அமலுக்கு வந்த பின் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. சித்தேரி மலைகிராமங்களுக்கு கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக அரசு, தனியாா் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை.
இதனால், சித்தேரி செல்லும் சாலையில் அமைந்துள்ள கீரைப்பட்டி, வாழைத்தோட்டம், வள்ளிமதுரை, தோல்தூக்கி, பேரேரி, சூரியக்கடை உள்ளிட்ட கிராமப் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களது அத்தியாவசியப் பணிகளுக்காக நகா் பகுதிகளுக்கு சென்று வரவும், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை சந்தைகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்ய முடியாமல் பல்வேறு சிரமங்களுக்கா ஆளாகி வருகின்றனா்.
அதேபோல், நாள்தோறும் கட்டட வேலை உள்ளிட்ட கூலி வேலைகளுக்குச் செல்லும் தொழிலாளா்களும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனா். எனவே, அரூா்-சித்தேரி வழித்தடத்தில் அரசு, தனியாா் பேருந்துகளை இயக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.