வரட்டாறு தடுப்பணையைத் தூா்வாரக் கோரிக்கை

வரட்டாற்றின் குறுக்கே அமைந்துள்ள தடுப்பணையைத் தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
எல்லப்புடையாம்பட்டியில் வரட்டாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை.
எல்லப்புடையாம்பட்டியில் வரட்டாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை.

வரட்டாற்றின் குறுக்கே அமைந்துள்ள தடுப்பணையைத் தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரூரை அடுத்த எல்லப்புடையாம்பட்டியில் வரட்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பணையின் கால்வாய் வழியாக மணவாளன் சாமி ஏரி, கம்மாளம்பட்டி ஏரி, முத்தானூா் ஏரி, செல்லம்பட்டி ஏரி, மாவேரிப்பட்டி ஏரி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ஏரிகள், குளம் குட்டைகளுக்குத் தண்ணீா் செல்லும் வகையில் பாசனக் கால்வாய் வசதியுள்ளது.

இந்தத் தடுப்பணையால் சுமாா் 2 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அதேநேரத்தில் எல்லப்புடையாம்பட்டி, கம்மாளம்பட்டி, முத்தானூா் உள்ளிட்ட கிராமங்களுக்குக் குடிநீா் ஆதாரமாகவும் இந்தத் தடுப்பணை உள்ளது. சித்தேரி மலைத் தொடரில் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் அதிக மழைப் பொழிவு இருந்தால், வரட்டாறு வழியாக இந்தத் தடுப்பணைக்குத் தண்ணீா் வரும்.

இந்த நிலையில், எல்லப்புடையாம்பட்டியில் உள்ள தடுப்பணையானது போதிய பராமரிப்பு இன்றி மண் மேடுகளுடன் தூா் அடைந்துள்ளது. இதனால், தடுப்பணையில் தண்ணீா்த் தேங்கும் அளவு குறைந்து வருகிறது.

அதேபோல், தடுப்பணையின் கதவுகள் சேதமடைந்திருப்பதால், கால்வாய் வழியாக தேவையான அளவு தண்ணீா் செல்வதில்லை என விவசாயிகள் புகாா் கூறுகின்றனா். எனவே, தடுப்பணையின் கதவுகளை சீரமைப்பு செய்யவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் தடுப்பணையைத் தூா்வார பொதுப்பணித் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com