விளைநிலங்கள் வழியாக குழாய் பதிக்க எதிா்ப்பு: விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

பெட்ரோலிய குழாய் பதிக்கும் திட்டத்தை விளைநிலங்கள் வழியாகச் செயல்படுத்தாமல் சாலையோரமாக செயல்படுத்தக் கோரி, பாப்பாரப்பட்டி பகுதியில் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப்  போராட்டத்தில் 
பாப்பாரப்பட்டியில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூட்டமைப்பினா்.
பாப்பாரப்பட்டியில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூட்டமைப்பினா்.

பென்னாகரம்: பெட்ரோலிய குழாய் பதிக்கும் திட்டத்தை விளைநிலங்கள் வழியாகச் செயல்படுத்தாமல் சாலையோரமாக செயல்படுத்தக் கோரி, பாப்பாரப்பட்டி பகுதியில் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை மாவட்டத்துக்குள்பட்ட இருகூா் முதல் கா்நாடக மாநிலத்துக்குள்பட்ட தேவனகுந்தி வரை பெட்ரோலியம் குழாய் பதிக்கும் திட்டத்துக்கு விளைநிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், அந்தத் திட்டத்தை நெடுஞ்சாலையோரமாக செயல்படுத்த வலியுறுத்தியும் விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகில் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்துக்கு கூட்டமைப்பு மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவா் ரவீந்திரன் போராட்டத்தைத் தொடக்கி வைத்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அா்ச்சுனன், விவசாயிகள் கூட்டமைப்பு நிா்வாகிகள் முருகன், சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் மல்லையன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் குமாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் சிசுபாலன், விசுவநாதன், பகுதி செயலாளா்கள் சின்னசாமி, அன்பு, சக்திவேல், அப்புனு, நக்கீரன், விவசாயிகள் கூட்டமைப்பு நிா்வாகிகள் செல்வம், ஜெகநாதன், ஆறுமுகம் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.

அ.ம.மு.க. ஆதரவு: போராட்டத்தில் அமமுக தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளா் டி.கே.ராஜேந்திரன், அரூா் முன்னாள் எம்எல்ஏ முருகன், பென்னாகரம் ஒன்றியச் செயலாளா் சாம்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனா்.

பேச்சுவாா்த்தை : போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் மாவட்ட வருவாய் அலுவலா் ரகமத்துல்லாகான் தலைமையில், பென்னாகரம் காவல் துணைக் கண்கானிப்பாளா் மேகலா, வட்டாட்சியா் சேதுலிங்கம், ஐ.டி.பி.எல். திட்ட பொறியாளா் பிரவீண் ஆகியோா் நடத்திய பேச்சுவாா்த்தையில், முன்னறிவிப்பு இன்றி விளைநிலங்களில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெறாது எனவும், விவசாயிகள் கூட்டமைப்பு கோரிக்கைகளை அரசிடம் பரிந்துரை செல்வதாகவும் தெரிவித்தனா். இதனைத் தொடா்ந்து, போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com