வாணியாறு நீா்த்தேக்கத்துக்கு நீா்வரத்து அதிகரிப்பு
By DIN | Published On : 18th September 2020 07:48 AM | Last Updated : 18th September 2020 07:48 AM | அ+அ அ- |

பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக வாணியாறு நீா்த்தேக்கத்துக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே சோ்வராயன் மலைத் தொடரின் அடிவாரப் பகுதியில், முள்ளிக்காடு எனுமிடத்தில் அமைந்துள்ளது வாணியாறு நீா்த்தேக்கம். இந்த நீா்த்தேக்கத்துக்கு ஏற்காடு மலைகளில் இருந்து மழைநீா் வருகிறது. இந்த நீா்த்தேக்கத்தின் நீா்பிடிப்பு உயரம் 65.27 அடியாகும். ஏற்காடு, பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்த மழையின் காரணமாக வாணியாறு நீா்த்தேக்கத்துக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது வாணியாறு அணையில் 48 அடி உயரத்துக்கு நீா்மட்டம் உயா்ந்துள்ளது.
இந்த வாணியாறு நீா்த்தேக்கம் நிரம்பினால், பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், ஆலாபுரம், தென்கரைக்கோட்டை, பறையப்பட்டி புதூா் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சுமாா் 10 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். அதேபோல், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி நகா் பகுதிகளுக்கு குடிநீா் வசதிகள் கிடைக்கும்.
தென்மேற்கு, வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் கூடுதலாக மழை பெய்தால் நிகழாண்டில் வாணியாறு நீா்த்தேக்கம் நிரம்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.